கள்ளக்குறிச்சி: சின்னசேலம் கலவரத்தின்போது கிழே கிடந்த பொருட்களை கிராம மக்கள், போலீஸாரிடம் ஒப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் கண்டெடுத்ததாக கூறி 14 ஜோடி கம்மல்களை ஒப்படைத்தார்.
மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து, சுமார் 3,200 மாணவ, மாணவியர் பயிலும் சின்னசேலத்தை அடுத்துள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் பள்ளிக் கட்டிடத்திற்கு தீவைக்கப்பட்டது. இதில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளியின் முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவை சாம்பாலாயின.
அந்தக் கலவரத்துக்கிடையே, கிராம மக்கள் சிலர் பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் இருக்கைகள், மின் விசிறிகள், ஏர் கூலர், ஏசி, கம்ப்யூட்டர், பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை தூக்கிச் சென்றனர். சமூக வலைதளங்களிலும், நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளில் இதுகுறித்த படங்களும், வீடியோக்களும் வெளியாயின.
தற்போது பள்ளிக் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள சூழலில், பள்ளியின் உடமைகளை தூக்கிச் சென்றவர்கள், போலீஸார் விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்பதால், அந்த பொருட்களை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைத்துவிடும்படி, சின்னசேலம் வட்டாட்சியர் உத்தரவின்பேரில், கிராம உதவியாளர் கனியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலம் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில், கலவரத்தின்போது கிழே கிடந்த பொருட்களை போலீஸாரிடம் கிராம மக்கள் ஒப்படைந்து வருகின்றனர்.
அந்த வகையில், சின்னசேலம் அருகே எலவடியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் நேற்று மாலை ‘கலவரத்தின்போது கண்டெடுத்தது’ எனக் கூறி 14 ஜோடி கம்மல்களை சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இவரைப் போல் சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளிக் கலவரத்தின்போது கண்டெடுத்த பொருட்களையும் பொதுமக்கள் ஒப்படைத்து வருகின்றனர். கிராம மக்களின் இந்தச் செயலை போலீஸார் பாராட்டி வருகின்றனர்.