சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.
பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்களும் மேற்கூறிய இணையதளங்களிலேயே தேர்வு முடிவை அறியலாம்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 91.25% பேர். மாணவிகள் 93% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 98. 83 % தேர்ச்சி பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 97.79% பேர் விகிதத்துடன் 3 வது இடத்தை பெற்றுள்ளது.
மாநில அரசுகள் கோரிக்கை: தமிழகத்தில் இவ்வாண்டுக்கான பிளஸ்-2 தேர்வு முடிவு 2 வாரங்களுக்கு முன்பாக வெளியானது. இதற்கு முன்னதாகவே பெரும்பாலான அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் இளங்கலை, இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை கல்லூரி நிர்வாகங்கள் பெற்றன.
ஆனால், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பிறகு அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜூலை 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்நிலையில் பிளஸ்-2 மத்திய பாடப்பிரிவுக்கான (சிபிஎஸ்இ) தேர்வு முடிவு தாமதத்தால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.