சூரிய மின் கணக்கீட்டு மீட்டர் வழங்க தாமதம்; ரூ. 2.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!

கரூர் மாவட்டம், க.பரமத்தியைச் சேர்ந்தவர் பாலு. இவர், கடந்த 2017-ம் ஆண்டு தனது வீட்டில் சூரிய மின் உற்பத்தி ஜெனரேட்டர் அமைத்து, அதன்மூலம் மின் உற்பத்தி செய்து, வீட்டுக்கு தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மீதமுள்ள உபரி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்பனை செய்யும்படியான திட்டத்தை அமல்படுத்தியிருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ், கடந்த 2017 – ம் ஆண்டு பாலு அவரது வீட்டில் ரூ.1.10 லட்சம் செலவில் சூரிய மின் உற்பத்தி ஜெனரேட்டர் (ரூப் டாப் சோலார் ஜெனரேட்டர்) நிறுவி, அதிலிருந்து பெற்ற மின் உற்பத்தியை வீட்டுக்கு பயன்படுத்திக் கொண்டு, மீதம் உள்ளதை மின்வாரியத்திற்கு அளித்து வந்தார்.

கரூர்

இந்த நிலையில், இப்படி தனது வீட்டில் செய்யப்படும் மின் உற்பத்தி, தான் பயன்படுத்தும் மின் அளவு, மின்வாரியத்திற்கு வழங்கும் மின் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்யும் நெட் மீட்டர் இணைப்புக்கு, கடந்த 2017 பிப்ரவரி மாதம் 27 – ம் தேதி, ரூ.6,025 செலுத்தி மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் காத்திருந்தார். ஆனால், பாலுவுக்குப்பிறகு இணைப்புக்குப் பணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், 8 மாதங்களுக்கு மேலாகியும், பாலுவுக்கு நெட் மீட்டர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாலு கடந்த 2017, நவம்பர் மாதம் 9 – ம் தேதி வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கரூர் ஊரக கோட்ட செயற்பொறியாளர், சின்னதாராபுரம் மற்றும் க.பரமத்தி உதவி பொறியாளர்கள் ஆகியோர் இழப்பீடாக ரூ.5 லட்சம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.10,000, மின் வாரியத்திற்கு கட்டணமாக செலுத்திய ரூ.10,000 ஆகியவற்றை வழங்கவேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவு

இவ்வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் (பொறுப்பு) ரத்னசாமி ஆகியோர் மின் வாரியத்தின் சேவைக் குறைப்பாட்டினால் பாலுவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10,000, மின் வாரியத்திற்கு கூடுதலாக செலுத்திய மின் கட்டணம் ரூ.10,000, இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கவும், இவற்றை ஆண்டுக்கு 7.5% வட்டியுடன் வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து கணக்கிட்டு , உத்தரவு வந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் வழங்கவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.