சென்னை: செஸ் ஒலிம்பியாட் தகவல்களை தெரிந்துகொள்ள இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் 10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, செஸ் ஒலிம்பியார் தொடர்பான தகவல்களை சதுரங்க ஆர்வலர்கள், போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல்கள் பெறும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளமும், செயலியும் உருவாக்கப்பட்டு வரும் விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.