ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி: 25ம் தேதி பதவியேற்கிறார்

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜ  கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். வரும் 25ம் தேதி நாட்டின் 15வது ஜனாதிபதியாக அவர் பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பழங்குடி இனத்தை சேர்ந்த ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளராக போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள மொத்தம் 776 எம்பிக்கள், 4033 எம்எல்ஏ.க்களில், காலியிடங்கள் மற்றும் தகுதி நீக்க காரணங்களால் 771 எம்பிக்களும், 4025 எம்எல்ஏ.க்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர். நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில், சிலர் வாக்களிக்காததால், 99.18% வாக்குகள் பதிவானது. மாநில சட்டப்பேரவைகளில் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அன்றிரவே டெல்லிக்கு கொண்டுச் செல்லப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறை எண்- 63ல் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431. இதில், 5,43,216 மதிப்புள்ள வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். பாஜ, அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவு மூலம் திரவுபதி முர்முவுக்கு 48 சதவீத வாக்குகள் இருந்தன. இது தவிர, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா, பகுஜன் சமாஜ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் முர்முவுக்கு ஆதரவளித்தன. இதனால், வாக்குப்பதிவு நடைபெறும் முன்பே முர்முவுக்கு 61% ஆதரவு கிடைத்து விட்டது. வாக்குப்பதிவின்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பி, எம்எல்ஏ.க்களில் பலர், கட்சி மாறி முர்முவுக்கு வாக்களித்தனர். இதனால், முர்முவுக்கு ஆதரவு மேலும் கூடியது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது நாடாளுமன்றத்தின் செயலாளர், வேட்பாளரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் உதவியாளர்கள் உடனிருந்தனர். முதலில் எம்பி.க்கள் பச்சை நிற வாக்குச்சீட்டில் வாக்களித்த வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, அகர வரிசைப்படி (ஆங்கில எழுத்து வரிசைப்படி) 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை மாநிலங்களவை பொதுச் செயலாளர் பிசி மோடி அறிவித்தார். அதில், முர்மு முன்னிலை வகித்தார். முதல் சுற்றில் எம்பி.க்களின் வாக்குகளில் முர்மு 540 வாக்குகளும், சின்கா 208 வாக்குகளும் பெற்றனர். பிற்பகலில் எம்எல்ஏ.க்கள் இளஞ்சிவப்பு  நிற வாக்குச்சீட்டில் வாக்களித்த வாக்குகள் எண்ணப்பட்டன. 2வது சுற்றின் முடிவில் முர்முவுக்கு 1,349 வாக்குகளும், சின்காவுக்கு 537 வாக்குகளும் கிடைத்தன. மாலை 6 மணி நிலவரப்படி 71.79% வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முர்மு 4,83,299 மதிப்புள்ள வாக்குகளையும், சின்கா 1,89,876 மதிப்புள்ள வாக்குகளையும் பெற்றனர். இரவு 8 மணி நிலவரப்படி முர்மு 5,77,777 மதிப்புள்ள வாக்குகளையும், சின்கா 2,61,062 மதிப்புள்ள வாக்குகளையும் பெற்றனர். இரவு வரையில் வாக்கு எண்ணிக்கை நீடித்தது. இறுதியில், முர்மு 64 சதவீத வாக்குகளும், யஷ்வந்த் சின்கா 36 சதவீத வாக்குகளும் பெற்றனர். முர்முவின் வெற்றியை பாஜ, அதன் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள உமா ஷங்கர் தீட்சித் மார்க்கில் உள்ள முர்முவின் இல்லத்திற்கு நேற்றிரவு சென்ற மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், பாஜ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், ராகுல்காந்தி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வரும் 25ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில், நாட்டின் 15வது ஜனாதிபதியாக முர்மு பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி* திரவுபதி முர்மு வெற்றி பெற்றதால், இந்திய வரலாற்றில் முதல் முறையாக பழங்குடியின பெண் ஒருவர், ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.* இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் இருந்தார். தற்போது, 2வது பெண் ஜனாதிபதியாக முர்மு பதவியேற்க உள்ளார்.15 வாக்குகள் செல்லாதவை * இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்பி.யின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.* எம்எல்ஏ.க்களின் வாக்கு மதிப்பு அவர்கள் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.* வாக்கு எண்ணிக்கையின்போது 15 எம்பி.க்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 2017ம் நடந்த தேர்தலில் 17 எம்பி வாக்குகளும், 2012ம் ஆண்டு நடந்த தேர்தலில் 15 எம்பி வாக்குகளும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.* துணை ஜனாதிபதி தேர்தல் பின் வாங்கினார் மம்தா துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்க உள்ளது. பாஜ கூட்டணி கட்சிகளின் சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்க்ரெட் ஆல்வா  போட்டியிடுகின்றனர். பாஜ.வுடனும், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கருடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்த இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முனைப்பு காட்டினார். பின்னர், எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவித்த யஷ்வந்த சின்காவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு உள்ள மார்க்ரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று திரிணாமுல் நேற்று அதிரடியாக அறிவித்தது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘பாஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜக்தீப் தன்கரை எங்கள் கட்சி ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், எதிர்க்கட்சி வேட்பாளரை அறிவிப்பதில் திரிணாமுலுடன் ஆலோசிக்கப்படவில்லை. இதனால், துணை ஜனாதிபதி தேர்தலில்  வாக்களிக்காமல் திரிணாமுல் ஒதுங்கி நிற்கும்,’ என்று தெரிவித்துள்ளார்.வெற்றி பேரணி, இரவு விருந்து* முர்மு வெற்றியை கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள பாஜ அலுவலகமான பந்த் மார்க்கில் இருந்து தொடங்கும் அபிந்தன் யாத்திரை, அசோகா சாலை, படேல் சவுக் மற்றும் ரபி மார்க் வழியாகச் சென்ற பிறகு ராஜ்பாத்தில் முடிகிறது. இதில், பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவும், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். * நாளை மறுநாளுடன் பதவிக் காலம் முடியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில், டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நாளை இரவு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.* தோல்வியை ஒப்புக் கொண்டு முர்முவுக்கு சின்கா வாழ்த்துஜனாதிபதி தேர்தலில் மூன்றாம் சுற்றின் முடிவில் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை முர்மு தாண்டினார். ஒவ்வொரு சுற்றிலும் அவருக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஸ்வந்த் சின்கா தனது தோல்வியை ஒப்புக் கொள்வதாக அறிவித்தார். மேலும், முர்முவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.* 20,000 லட்டு, நடனம், ஊர்வலம்முர்மு முன்னிலை பெற்றது முதலே அவரது சொந்த கிராமமான ஒடிசாவில் உள்ள ரைரங்கபூர் கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரது வெற்றியை கொண்டாட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன் கிராமத்தினருக்கு இனிப்பு வழங்க 20 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் மேளதாளம் முழங்க ஊர்வலம் நடத்தப்படுகிறது. பழங்குடியினர் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.