கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தமிழ்நாடு உளவுத்துறையின்மீதும் புகார் எழுந்தது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம்தான் வன்முறைச் சம்பவங்களுக்கு திட்டமிடப்பட்டதை கவனிக்கத் தவறியதாகவும் உளவுத்துறைமீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு உளவுத்துறைமீது விமர்சனங்கள் எழுந்த சூழலில்தான் உளவுத்துறையின் ஐ.ஜி-யாக இருந்த ஆசியம்மாள் மாற்றப்பட்டு செந்தில்வேலன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு உளவுத்துறையில் பணியாற்றிவிட்டு சமீபத்தில்தான் மீண்டும் தமிழ்நாட்டுப் பணிக்குத் திரும்பினார்.
ஐ.ஜி அந்தஸ்திலிருக்கும் செந்தில்வேலன், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். செந்தில்வேலனுக்கு முக்கியமான பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்தான் உளவுத்துறையின் ஐ.ஜி பணி வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசிலும் உளவுத்துறை பணியிலிருந்ததால் செந்தில்வேலன், மாநில அரசின் உளவுத்துறை பணியிலும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை அவர்மீது வைக்கப்பட்டிருக்கிறது.
செந்தில்வேலன் ஐ.பி.எஸ்-ஸின் சொந்த ஊர் மதுரை. இவரின் தந்தை தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலைப்பார்த்தார். செந்தில்வேலனுக்கு சிறு வயது முதல் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் அவரின் தந்தை, செந்தில்வேலனை டாக்டராக்க ஆசைப்பட்டார். அதனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முதலில் செந்தில்வேலன் டாக்டரானார். அதன்பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரியானார். தமிழ்நாடு கேரடர் ஐ.பி.எஸ் அதிகாரியான டாக்டர் செந்தில்வேலனுக்கு கமுதியில் ஏ.எஸ்.பி-யாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு சிறப்பாகப் பணியாற்றிய அவர், சிதம்பரத்துக்கு இடமாற்றப்பட்டார். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம், நடராஜர் கோயில் விவகாரம் ஆகியவற்றை சுமுகமாகக் கையாண்டார்.
இதையடுத்து தஞ்சாவூர், ராமநாதபுரம், சென்னை அடையாறு ஆகிய இடங்களில் பணியாற்றினார். சென்னை அடையாறு துணை கமிஷனராக செந்தில்வேலன் பணியாற்றியபோதுதான் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் பூஜையையொட்டி பாதுகாப்பு பணிக்காக செந்தில்வேலன் அங்கு அனுப்பப்பட்டார். அப்போது நடந்த கலவர சூழலையும் செந்தில்வேலன் சிறப்பாகக் கையாண்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவர் மாற்றப்பட்டார். அதன்பிறகு மத்திய அரசு பணிக்காகச் சென்ற செந்தில்வேலன் மீண்டும் தமிழ்நாடு திரும்பியிருக்கிறார். உளவுத்துறையில் நல்ல அனுபவம் கொண்ட செந்தில்வேலனுக்கு சில சவால்கள் காத்திருக்கின்றன. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசும் அவரிடம் சில அசைமெண்ட்டுகளைக் கொடுத்திருக்கிறது.
உளவுத்துறை ஐ.ஜி பணி என்பது முக்கியமானது. தமிழ்நாட்டில் எந்த மூலையில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் அதற்கான பின்னணிகளை கண்டறிந்து அரசுக்கு ரிப்போர்ட் கொடுப்பது, சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமலிருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, அரசியல் மூவ்மென்ட்டுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டும். இந்தப் பணிகளுக்குச் சரியான நபர் செந்தில்வேலன்தான் என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் சிபாரிசு செய்திருக்கின்றனர். அதனடிப்படையில்தான் அவரின் பெயர் டிக் அடிக்கப்பட்டிருப்பதாக ஐ.பி.எஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.