புதுடெல்லி: டெல்லியில் இன்று காவிரி ஆணைய கூட்டம் நடந்தது. இதில், மேகதாது குறித்து எந்த ஒரு பேச்சும் எழவில்லை. கர்நாடகாவும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், மே மாத இறுதியில் நடக்க இருந்தது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க, கர்நாடக அரசு விரும்பியது. இதை, காவிரி மேலாண்மை ஆணைய தலைவரும் ஏற்று கொண்டார். ஆனால், தமிழகம் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, ஆணைய கூட்டம் 3 முறை ரத்து செய்யப்பட்டது. ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேகதாது அணை குறித்து ஆலோசனை நடத்த தடை விதித்துள்ளது.இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை வகித்தார். தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போன்று கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களின் சார்பில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மழை அளவு, காவிரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு, காவிரி ஆறு பகுதியில் உள்ள தடுப்பணைகள் பராமரிப்பு, அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீர்பங்கீடு செய்யப்பட்டுள்ளதா, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோன்று இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை காவிரியில் இருந்து வெளியேறிய நீரின் அளவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் சுமூகமாக முடிவடைந்தது. இதில் முக்கியமாக, இன்று காவிரி ஆணைய கூட்டத்தின்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி மேகதாது குறித்து எந்த ஒரு பேச்சும் எழவில்லை. கர்நாடகாவும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.