சென்னை: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து திருடுபோன சரபோஜி, சிவாஜி மன்னர்கள் ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு தமிழகம்கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டிருந்த மன்னர்கள் சரபோஜி, அவரது மகன் சிவாஜி ஆகியோர் இணைந்திருக்கும் ஓவியம் திருடுபோனது. இந்த ஓவியம் 1822-1827 காலகட்டத்தில் வரையப்பட்டது. அதை கண்டுபிடிக்குமாறு 2017-ல் ராஜேந்திரன் என்பவர், தமிழக காவல் துறையில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, காணாமல் போன ஓவியத்தை கண்டுபிடித்து மீட்க, தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, தனிப்படை போலீஸார் திருடுபோன ஓவியம் தொடர்பான தகவல்கள் குறித்து பிற நாட்டில் உள்ள பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும், அருங்காட்சியகங்களிலும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான சரபோஜி – சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் அந்த ஓவியம், அமெரிக்காவில் உள்ள பிஇஎம் என்ற அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டதும், பின் முறையான ஆவணங்கள் இல்லாததால் அமெரிக்காவின் ஹோம்லேண்ட் இன்வெஸ்டிகேஷன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டறிந்தனர்.
குறிப்பாக கடந்த 2006-ம் ஆண்டு, பிரபல சிலை கடத்தல்காரர் சுபாஷ் கபூர், போலியான ஆவணங்கள் கொடுத்து அமெரிக்காவில் உள்ள பிஇஎம் அருங்காட்சியகத்துக்கு சரபோஜி, சிவாஜி ஓவியத்தை 35 ஆயிரம் டாலருக்கு விற்றது தெரியவந்தது.
அமெரிக்காவின் ஹோம்லேண்ட் இன்வெஸ்டிகேஷன் வசம் இருந்த அந்த ஓவியத்தை அந்நிறுவனம் 2015-ல் ஒப்படைக்க முன் வந்தும், அதைப் பெற்று இந்தியாவுக்கு கொண்டுவர யாரும் முயற்சி செய்யவில்லை.
இந்நிலையில்தான் 2017-ல் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, தற்போது துப்பு துலக்கப்பட்டு இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த ஓவியத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல்தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண் டுள்ளனர்.
ஏற்கெனவே, சரஸ்வதி மகாலில் இருந்து திருடப்பட்ட, முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அண்மையில் கண்டுபிடித்து அதை மீட்டிருந்த நிலையில், தற்போது 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர்கள் சரபோஜி, சிவாஜி ஆகியோரின் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கும் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.