கடந்த 18ஆம் தேதி , பால் பொருட்களான தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்டவற்றிற்கு 5% ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) விதித்துள்ளது இந்திய மத்திய அரசு. சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளதால் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிட்டெட், ஆவின் தயாரிப்புகளான தயிர், நெய் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதற்குக் காரணம், மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) 5% உயர்த்தியதே என்று கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் தயாரிப்புகளின் விலை உயர்வானது கடந்த மூன்று மாதங்களில் இது இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இந்தாண்டு மார்ச் மாதம், நெய் ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்திய நிலையில், தற்போது ஒரு லிட்டருக்கு 50 ரூபாயாகவும், தயிருக்கு 10 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.
அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் தயிர் பாக்கெட்டிற்கான விற்பனை விலையை உயர்த்தியுள்ளன. தயிரினை லிட்டருக்கு 4 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை உயர்த்தி, 5% ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு 15% வரை விலையை உயர்த்தியுள்ளன.
திருத்தப்பட்ட விலையின்படி, ருபாய்.10ற்கு விற்கப்பட்ட 100 கிராம் ஆவின் தயிர் பாக்கெட்டின் விலை இப்போது ரூபாய்.12 ஆகவும்,
ரூபாய்.25ற்கு விற்கப்பட்ட 200 கிராம் தயிரின் விலை இப்போது ரூபாய்.28 ஆகவும்,
ரூபாய்.30ற்கு விற்கப்பட்ட 500 மில்லிலிட்டர் பாக்கெட் தயிரின் விலை தற்போது ரூபாய்.35 ஆகவும்,
ரூபாய்.15ற்கு விற்கப்பட்ட 200 மில்லிலிட்டர் தயிர் ஸசெடின் விலை தற்போது ரூபாய்.18 ஆகவும்,
ரூபாய்.40ற்கு விற்கப்பட்ட 400 கிராம் பிரீமியம் தயிர் கப்பின் விலை தற்போது ரூபாய்.50 ஆகவும்,
ரூபாய்.100ற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பிரீமியம் தயிரின் விலை தற்போது ரூபாய்.120 ஆகவும்,
ரூபாய்.27க்கு விற்கப்பட்ட 200 மில்லிலிட்டர் ப்ரோ பையோட்டிக் லஸ்ஸி தற்போது ரூபாய்.30 ஆகவும்,
ரூபாய்.23க்கு விற்கப்பட்ட 200 மில்லிலிட்டர் மேங்கோ மற்றும் சாக்லேட் லஸ்ஸியின் தற்போதைய விலை ரூபாய்.25 ஆகவும்,
ரூபாய்.15க்கு விற்கப்பட்ட 200 மில்லிலிட்டர் இம்முனிட்டி பூஸ்டர் மோரின் விலை தற்போது ரூபாய்.18 ஆகவும்,
ரூபாய்.535க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் நெய்யின் விலை தற்போது ரூபாய்.580 ஆகவும்,
ரூபாய்.275க்கு விற்கப்பட்ட 500 மில்லிலிட்டர் நெய்யின் விலை தற்போது ரூபாய்.290 ஆகவும்,
ரூபாய்.2,650க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் நெய்யின் விலை தற்போது ரூபாய்.2,900 ஆகவும்,
ரூபாய்.8,680க்கு விற்கப்பட்ட 15 கிலோ நெய்யின் விலை தற்போது ரூபாய்.9,680 ஆகவும்,
ரூபாய்.585க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பிரீமியம் நெய்யின் விலை தற்போது ரூபாய்.630 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுவரை, பால் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யின் வரம்பு இல்லாமல் இருந்தது, அதனால் அரசுக்கு சொந்தமான கூட்டமைப்பு நிறுவனங்கள் பால் தயாரிப்புகளின் விலையை நிர்ணயம் செய்ய தடையில்லாமல் செயல்பட்டன.
ஆனால் சமீபகாலமாக, ஆவின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கான வரியும் லிட்டருக்கு ரூபாய்.45இல் இருந்து ரூபாய்.80 ஆகா அதிகரித்துள்ளது. மேலும், எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளதால், ஆவின் தொழிற்சாலையில் கொள்முதல், உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு தேவைப்படும் போக்குவரத்தின் செலவு அதிகரித்துள்ளது.
திருத்தப்பட்ட ஆவின் தயாரிப்புகளின் விலையை 21.07.2022 முதல் அமல்படுத்துவதாக கூறப்பட்டதனால், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
“கடந்த 2019ஆம் ஆண்டு, ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை, பசும்பால் லிட்டருக்கு 4.ரூபாயும், எருமைப்பால் லிட்டருக்கு 6.ரூபாயும், நெய் லிட்டருக்கு 30.ரூபாயும், தயிர் பாக்கெட் 4.ரூபாயுமாக மாநில அரசு உயர்த்தியது. இந்த வருடம் மட்டுமே வரலாறு காணாத வகையில் விற்பனை விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளதால், நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறுகிறார்.
மேலும், “ஆவின் லாபத்தை தக்க வைத்துக்கொள்ளும் அதே வேளையில், தற்போதைய சந்தை நிலவரத்திற்கு இணையாக கொள்முதல் விகிதத்தை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையையும், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளையும் பரிசீலிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.