அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள பொது சுகாதார ஆய்வகம் முழு பயன்பாட்டில் இல்லாததால், திருப்பூர் மாவட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் பயன்படும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொது சுகாதாரம்மற்றும் நோய் தடுப்புத் துறை பிரிவின் கீழ், ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கல்லீரல், சிறுநீரகம் தொடர்பான ரத்தபரிசோதனைகள், தைராய்டு பரிசோதனைகள், வயிற்றுப் போக்கின் போது உடலில் குறையும் நீர்ச்சத்து குறைபாடு தொடர்பான பரிசோதனைகள்,
சிறுநீரகத் தொற்று, ரத்த தொற்று, சீழ் கட்டி ,ஆறாத புண், சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதை பிரச்சினைகள், டெங்கு, எலி காய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள், குடிநீர் மூலமாக பரவும் பாக்டீரியா தொற்று உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும். ஆனால், தற்போதுஇந்த ஆய்வகத்தில் போதிய பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “கரோனா தொற்றுக்கு முன்பாக இந்த ஆய்வகம் ரூ.1 கோடி மதிப் பீட்டில் திறக்கப்பட்டது. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த ஆய்வகம் இருக்கும்.இந்த ஒருங்கிணைந்த பொதுசுகாதாரத் துறை ஆய்வகம், ஒவ்வொரு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தும், அங்கு பரிசோதிக்க வசதி இல்லாத பரிசோதனைகளுக்கு ரத்த மாதிரிகள் சேகரித்து, இந்த பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்புடைய வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனை முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின், நோயாளிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை முடிவின்படி சிகிச்சைகள் அளிக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், இங்கு ஆய்வகம் முழுமையாக பயன்பாட்டில் இல்லை. நுண்ணுயிரியல் ஆய்வகமான இதில், வெறும் குடிநீரில் பரவும் பாக்டீரியா தொற்று, டெங்கு முதல் நிலை, 2-ம் நிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இதில் தைராய்டு பரிசோதனை உள்ளிட்டவை இல்லாததால், கர்ப்பிணிகளுக்கு பயன்படாமல் உள்ளது. தனியாருக்கு சென்று கட்டணம் செலுத்தி, இந்த பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்” என்றனர்.
ஆய்வகம் அவசியம்
அரசு மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டபோது, “ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஆய்வகம், முழு பரிசோதனை மையமாக இன்னும் மாறவில்லை. ஆய்வகத்தில் 2 பேர் மட்டும் பணிபுரிகின்றனர். கரோனா காலத்தில், மக்களுக்கான அரசின் மருத்துவ சேவை மீது பலருக்கும் நன்மதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 13 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 14 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் பிற சுகாதார நிலையங்களுக்கு இந்த ஆய்வகத் தேவை என்பது மிகவும் அத்தியாவசியமானது. ஆய்வகத்தில் குறிப்பிட்ட சில பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை” என்றனர்.
திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் கூறும்போது, “நோய் தடுப்பு ஆய்வகத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா ஆகிய நோய்களுக்குதான் பரிசோதனை செய்யப்படுகிறது. தைராய்டு உள்ளிட்டவைக்கு மருத்துவக் கல்லூரியில்தான் பரிசோதனை செய்யப்படும்” என்றார்.