68-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டநிலையில், தமிழ் திரையுலகிற்கு என்னென்ன விருதுகள் கிடைத்துள்ளன என்பது பற்றி பார்க்கலாம்.
ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் பணிபுரிந்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் திரைப்பட விழா இயக்குநரகம் தேசிய விருதினை அறிவிக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேசிய விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020-ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை டெல்லியில் அறிவிக்கப்பட்டன.
இதில் சுதா கொங்கராவின் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வெளிவந்த நிலையில், இன்று 5 விருதுகளை அந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. அதன்படி,
1. சிறந்த நடிகர் – சூர்யா (சூரரைப் போற்று)
2. சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
3. சிறந்த திரைப்படம் – சூரரைப் போற்று (2டி எண்டெர்டெயின்மெண்ட், சிக்யா எண்டெர்டெயின்மெண்ட்)
4. சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)
5. சிறந்த திரைக்கதை – ஷாலின் உஷா நாயர், சுதா கொங்கரா (சூரரைப் போற்று)
இதேபோல் அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிய ‘மண்டேலா’ படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது ‘மண்டேலா’ படத்திற்காக மடோன் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருதும் ‘மண்டேலா’ படத்திற்காக மடோன் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வசந்த் இயக்கத்தில் வெளியான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் சிவரஞ்சனியாக நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்ரீகர் பிரசாத், சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். தமிழில் சிறந்த படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் தேர்வாகியுள்ளது.
மேலும் சிறந்த நடிகருக்கான விருதை, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானுடன் நடிகர் சூர்யா பகிர்ந்துகொள்ள உள்ளார். ‘Tanhaji: The Unsung Hero’ என்ற படத்தில் நடித்ததற்காக அஜய் தேவ்கானும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தென்னிந்திய மொழிகளில் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த பிஜூ மேனன் சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். இதேபோல் இந்தப் படத்தில் பாடிய பழங்குடியினர் பாடகி நஞ்சம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த சண்டைக்காட்சிகளுக்கான விருதை ராஜசேகர், மாஃபியா, சுப்ரீம் சுந்தர் தட்டிச் சென்றுள்ளனர்.
அல்லு அர்ஜூனின் ‘ஆலோ வைகுந்தபுரம்லோ’ படத்திற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தமனுக்கு கிடைத்துள்ளது. ‘Sandhya Raju for Natyam’ தெலுங்குப் படம் சிறந்த நடனத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.