நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்
சென்னை: தன்னைப் பற்றி அவதுாறாக பேசுவதாக நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் கூறியுள்ளார்.
படத் தயாரிப்பு தொடர்பாக நடிகர் விமலுக்கும், தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையில் ஏற்கனவே பிரச்னை உள்ளது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்நிலையில், நடிகர் விமல் அளித்த பேட்டி ஒன்றில், 'என் வாழ்க்கையை இன்னொருவர் வாழ்ந்துள்ளார். இதற்கு, நானும் அனுமதி அளித்துள்ளேன் என்பது, தாமதமாகவே தெரிந்தது. மூன்றாண்டுகளாக, என் வாழ்க்கையை என்னால் வாழ முடியாமல் செய்து விட்டனர்' எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, சிங்காரவேலன் கூறியுள்ளதாவது: விமல் சொன்ன கருத்துகள் வருத்தமளிக்கின்றன. வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 'விமல் வழக்கை, நேர்மையாக விசாரிக்க வேண்டும்' என, நீதிமன்றமே கூறியுள்ளது. முதல்வரை சந்தித்து நான் மனு கொடுத்துள்ளேன். என் கடிதம் உரிய துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.
என்னை விட விமலுக்குத் தான் மனசாட்சி உறுத்த வேண்டும். விமல் வாழ்க்கையை நான் தட்டிப் பறிக்க வேண்டிய அவசியமே இல்லை. மன்னர் வகையறா படத்திற்கு பின், விமல் நடித்த மூன்று படமும் மிகப்பெரிய தோல்வி. தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பெரும் நஷ்டம்; விமல் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.