டெல்லி: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 4-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல விலைவாசி உயர்வு, பணவீக்கம், அக்னிபாதை திட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அவையை நடத்தவிட முடியாமல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி, அக்னிபாதை திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக கோஷம் எழுப்பிஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையை முடக்கினர். இந்நிலையில் இன்று மக்களவை காலை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அவையின் மைய பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கையில் பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர். மேலும் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த சபாநாயகர் ஓம் பிர்லா இதை ஏற்க மறுத்தார். தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு பின்பும் இதே நிலை நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். மதியம் 12 மணிக்குப் பின்னர் அவை கூடியபோது எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் அவையில் தொடர்ந்து கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது நாளாக மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நிகழ்ச்சிகள் நடைபெறாமலேயே அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி. ஆகியவற்றுக்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.