புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று நான்காவது நாளாக முடங்கியது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணவீக்கம், அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து, நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல் 2 மற்றும் 3-ம் நாளும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நேற்று மக்களவை கூடியதும் இதே நிலை தொடர்ந்தது. கேள்விநேரம் தொடங்கிய பிறகு, அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமான ஒத்தி வைப்புக்குப் பின் அவை நேற்று மதியம் 2.15 மணிக்கு கூடியதும், இந்தியன் அன்டார்டிக் மசோதா முக்கியமானது என்பதால் இதன் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அவையில் இல்லை. நேஷனல் ஹெரால்டு வழக்கில்,காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து முக்கிய அமைச்சர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று கூட்டினார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அனுராக் தாக்குர் மற்றும் கிரண் ரிஜிஜூ உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிலைமையை சமாளிக்கும், மத்திய அரசின் வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதேபோல் மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி அவைத் தலைவர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.