'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'- வேட்டைக்கு தயாராகும் வேங்கையாக மீண்டும் Yamaha RX 100!

ஜாவா, பஜாஜ் சேட்டக் போன்ற பல விண்டேஜ் வாகனங்கள் தற்போது மீண்டும் புதிய வடிவில் கம்பேக் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் யமஹா ஆர்.எக்ஸ்.100 (Yamaha RX 100) பைக் தற்போது மீண்டும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வாகன விற்பனையை பொறுத்தவரை, எப்போதுமே பழைய வாகனங்களுக்கு மவுசு அதிகம். அதன் மீதான விற்பனை மோகம் கொஞ்சம் கூட குறைவதில்லை. அதற்கு முக்கிய காரணம், அந்த வாகனம் கொடுக்கும் நாஸ்டாலஜிக் உணர்வு மற்றும் அவற்றின் செயல்திறனும் சத்தமும். அப்படி 70ஸ், 80ஸ் தொடங்கி 90ஸ் கிட்ஸ் வரை பலருக்கும் ஃபேவரைட்டான யமஹா ஆர்.எக்ஸ்.100, இப்போது மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்து விற்பனைக்கு வர உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அட… நீங்க நம்பலனாலும், அதாங்க நெசம்! இந்தியாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகிறது.
image
யமஹா ஆர்.எக்ஸ்.100 ரக இருசக்கர வாகனங்கள், நவம்பர் 1985 முதல் மார்ச் 1996 வரை விற்பனையில் இருந்தது. 90களின் தொடக்கத்தில், பரவலாக இந்த பைக் வாங்கப்பட்டது. 100 சிசியில் 2 ஸ்ட்ரோக் என்ஜின், குறைவான எடை என்று இருந்ததால், பலராலும் இந்த ரக பைக் ரசிக்கப்பட்டது. இந்த ரக பைக்கை வாங்குவதென்பதே பலருக்கும் கனவாக இருந்தது. குறிப்பாக 80 களில் பிறந்து, 90களில் இளமை பருவத்தில் இருந்தோருக்கு ஆர்.எக்ஸ்.100 என்பது, மிகப்பெரிய ஆசையாக இருந்தது.
இது விற்பனை செய்யப்பட்ட நேரத்தில் ராயல் என்ஃபீல்ட் புல்லட், ராஜ்தூத், இண்ட் சுசூகி, ஹோண்டா சிடி 100, கவாசகி கேபி 100 என பல ரக பைக்குகள் விற்பனையில் இருந்தன. எல்லாவற்றையும் கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஆர்.எக்ஸ்.100. ஆனால் பல வருடங்களுக்கு விற்பனை சந்தையில் நிலைக்க முடியவில்லை.
image
இருந்தாலும்கூட விற்பனை நிறுத்தப்பட்ட பின்னரும்கூட பைக் விற்கப்படும் சந்தையில், பழைய ஆர்.எக்ஸ்.100 மாடலுக்கு தேவை இருந்து வந்தது. பலரும் தங்களுக்கு இந்த ரக பைக் தேவை என்று தொடர்ந்து நிறுவனத்தை அனுகிவந்தனர். இதனால், இன்றளவும் அந்நிறுவனம் யமஹா ஆர்.எக்ஸ்.100-ன் உதிரி பாகங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.
(யமஹா நிறுவனம் முதலில் உதிரி பாகங்களையே இறக்குமதி செய்து வந்தது. அவற்றை ஒருங்கிணைத்துதான் இந்தியாவில் ஆர்.எக்ஸ்.100 பிராண்டை அது விற்பனைக்கு கொண்டு வந்தது. இக்காரணத்தால், பைக் உற்பத்தியை நிறுத்திய பின்னரும் உதிரி பாகங்களை விற்பதென்பது அந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக இல்லை)
image
விண்டேஜ் வாகனமாக இருந்தாலும்கூட, 1990களில் சுமார் 20,000-க்கும் விற்கப்பட்ட யமஹா ஆர்.எக்ஸ்.100, இப்போது செகண்ட் ஹேண்டாக வாங்கினால்கூட 50,000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. அதிக விலை என்றாலும்கூட, அதை விற்பனை செய்தாவர்களும் இருக்கிறார்கள். `எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் கொடுக்கமாட்டேன்’ எனக்கூறி, லட்சங்களில் அதற்கு சர்வீஸ் செய்வோர் இங்கு உண்டு.
இதையெல்லாம் மனதில் வைத்தே யமஹா இந்தியாவின் தலைவர் ஈஷின் சிஹானா (Eishin Chihana), தங்கள் நிறுவனத்தின் ஆர்.எக்ஸ்.100 ரகத்தை புதிய மாடலில் மீண்டும் களமிருக்க உள்ளதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த புதிய Yamaha RX100, நவீன வடிவமைப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என்று சொல்லப்பட்டாலும்கூட, தற்போது வழக்கத்திலுள்ள பைக் வகைகளிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதால் இதை உருவாக்குவதில் யமஹா நிறுவனத்துக்கு பெரும் சவால்கள் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
image
இதை குறிப்பிட்டே ஈஷின் சிஹானா தனது பேட்டியில், “புதிய RX100 பிராண்ட், சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் வடிவமைப்புடன் கூடிய தொகுப்பாக இருக்கும்” என்றுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “யமஹா அடுத்த மூன்று ஆண்டுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. தற்போது, வரவிருக்கும் யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சோதனைக் கட்டத்தில் உள்ளன” என்றும் கூறியிருந்தார்.
2025 ஆம் ஆண்டுக்குள், ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு இதுபோன்ற டிமாண்ட்கள் தொடருவதால், சந்தையும் இப்படி தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனமும்கூட, தாங்கள் நம்பகமான மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த விரும்புவதாக கூறியிருந்தது.
image
யமஹாவை பொறுத்தவரை ஆர்.எக்ஸ்.100 மட்டுமன்றி யமஹா என்.மேக்ஸ்155 விரைவில் வர உள்ளது. அது எல்.இ.டி. ஹெட்லேம்ப், விசர், டிஜிட்டல் கருவிகள், ஸ்மார்ட்ஃபோன் இணைக்கும் வசதி, 12 வால்ட் சார்ஜிங் சாக்கெட், சாவி இல்லாமலேயே இன்ஜின் இம்மொபிலைசர் வைத்து வண்டியை ஸ்டார்ட் செய்யும் வசதி என பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.