கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு உத்தரவு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது,
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை நீதிபதி சதீஷ்குமார் முன்பு மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்தனர். மேலும், பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது,
வழக்கு விசாரணையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தடவியல் நிபுணர் உடல் கூறாய்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், நீதிபதியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில் ஓய்வு பெற்ற தடவியல் நிபுணர் சாந்தகுமார் நீதிபதி முன் ஆஜராகி, மறு உடற்குறைவு குறித்து விளக்கம் அளித்தார். மேலும், இரண்டாவது பிரதேச பரிசோதனை போது எதுவும் புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தடவியல் நிபுணர் தெரிவித்தார்.
அப்போது, “நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என மாணவியின் பெற்றோரிடம் நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நீதிபதி சதீஷ்குமார் தெரிவிக்கையில், கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. ஒவ்வொரு முறையும் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள். அமைதியாக தீர்வு காண வேண்டும். மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள். மாணவி உடல் பரிசோதனை உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோருக்கு “கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளை விரைந்து நடத்துங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, நாளை தங்களது மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் உடலை நாளை காலை 6 மணிக்கு பெற்றுக்கொள்கிறோம் என்று தெரிவிக்க, அதற்க்கு நீதிமன்றம், நாளை காலை உடலை பெற்றுக் கொண்டு, மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.