ஷெங்ஸ்ஹோ (சீனா): பேங்க் ஆப் சீனாவின் கிளைகளில் மக்கள் தங்கள் சேமிப்புகளிலிருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் பகுதியில் உள்ள வங்கிக் கிளையிலிருந்து பணத்தை எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வங்கி ஏடிஎம் களிலிருந்து பணத்தை எடுக்ககாத்திருக்கும் மக்களை மிரட்டும்வகையில் பீரங்கிகளை சீன ராணுவம் தெருக்களில் குவித்துள்ளது. முதலீட்டாளர்களிடமிருந்து வங்கியைக் காக்கும் வகையில் இந்தநடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
தியானன்மென் பீரங்கி: தெருக்களில் பீரங்கிகள் ரோந்து வருவது தியானன்மென் சதுக் கத்தில் 1989-ம் ஆண்டு நிகழ்ந்த பீரங்கிக் குண்டு தாக்குதல் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.
சீன ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் ஜனநாயகம் வேண்டியும் ஜூன் 4, 1989-ம் ஆண்டு பெரும் திரளாக மாணவர்கள் தியானன்மென் சதுக்கத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸார், ராணுவத்தை அழைத்தனர். ராணுவமும் நிலைமை கைமீறி போவதை உணர்ந்து மாணவர்களை கட்டுப்படுத்த பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்காண மாணவர்கள் உயிரிழந்தனர். சீனவரலாற்றில் மிகப் பெரும் கரும்புள்ளியாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளைக் காப்பதற்காக பீரங்கிகளை சீன அரசு பிரயோகம் செய்துள்ளது அந்த சம்பவங்களை நினைவுபடுத்துவதாக உள்ளது.
வாடிக்கையாளர்களின் கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்துபடிப்படியாக டெபாசிட்களை திரும்ப அளிக்கத் தொடங்கியுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.