தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஒரு கடையில் பழங்கால சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு திடீரென சென்று ஆய்வு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர். இதன் மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து திருடுபோன பழங்கால சிலைகள் மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், தஞ்சாவூர் சிவாஜி நகரில் உள்ள ஆர்ட் வில்லேஜ் என்ற கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆர்ட் வில்லேஜ் என்ற கடையின் உரிமையாளர் கணபதி, என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 2017 ஆம் ஆண்டு பழங்கால சிலைகள் எனக்கூறி இந்திய தொல்லியல் துறையிடம் வெளிநாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்டு சில சிலைகளுக்காக விண்ணப்பம் அனுப்பியதும், அதற்கு ஒப்புதல் தர மறுத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், மாவட்ட நீதிமன்றத்தில் தேடுதல் வாரண்ட் அனுமதி பெற்று சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்த பெருமாள், அப்பர், ரிஷப தேவர், சிவகாமி அம்மன், சுந்தரர், மாணிக்கவாசகர், குட்டி நந்தி உள்பட 14 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சிலைகளுக்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால், அவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.