சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமிமற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர், மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தி யாளர்களிடம் கூறியதாவது. தமிழகத்தில் நடைபெறும் தேசவிரோத செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். அவை தமிழகத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளன. தமிழகத்தில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது.
தீவிரவாதிகளுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காவல் துறை அதிகாரிகள்உடந்தையாக இருந்திருக்கிறார் கள். விமானப்படை தளபதி வீட்டு முகவரியிலேயே போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல 200-க்கும் மேல் போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் மட்டும் 72 பேருக்குபோலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம் போன்ற அதிகாரிகள் உளவுத் துறையில் இருப்பதால்தான் போலி பாஸ்போர்ட், கள்ளக்குறிச்சி கலவரம் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
எனவே, டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனடியாக பணிநீக்கம் செய்து, அவரை விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி யுள்ளோம்.
இதுதொடர்பாக ஆதாரப் பூர்வமாக புகார் மனு அளித்துள்ள நிலையில், ஆளுநர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.
ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்தது, நிர்வாக ரீதியிலான மாற்றம் மட்டும்தான். தவறு செய்த அதிகாரிகளை தமிழக அரசு பாதுகாத்து வருகிறது. ஒழுங்கற்றவர்களை தலைமைப் பீடத்தில் வைத்திருப்பதுதான் தவறுகளுக்குக் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.