கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் 10-வது நாளாக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ளாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் மதி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் மறுத்துவிட்டனர். மேலும், பள்ளியில் பெரும் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக 300 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைத்த காவல் துறையினர், மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண் டனர்.
மாணவியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இவ்வழக்கில் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதால், அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வரவுள்ளது.
மாணவியின் உடலை பெற்றோர் நேற்று பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் உடலை பெற்றுக் கொள்ளவில்லை. இதனால் 10-வது நாளாக மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக் கப்பட்டுள்ளது.
18 பேர் குழு விசாரணை
மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் நேற்று உளுந்தூர்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில், 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காண்பது என முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வன்முறை நேரிட்ட பள்ளி வளாகத்திலும் இக்குழுவினர் நேற்று ஆய்வில் ஈடுட்டனர். தொடர்ந்து, தங்களிடம் உள்ள பல்வேறு புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களைக் கொண்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.