கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றோர் பெற்றுக்கொள்வது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக அவரின் பெற்றோர் நீதிபதியிடம் உறுதியளித்தனர்.
பெற்றோர் தரப்பில் தங்கள் மகளின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறனர். அதனை ஏற்ரு நீதிமன்ற தரப்பில் `நாளை காலை 6 – 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளவேண்டும்’ என நீதிபதி அவர்களுக்கு கெடு கொடுத்துள்ளார். மேலும், நாளை மாலை 6 மணிக்குள் இறுதிச்சடங்கை முடிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தொடர்ந்து `உடலை வாங்குவதற்கு ஏன் தாமதம்?’ என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
முன்னதாக இன்று காலை கள்ளக்குறிச்சி மாணவி உடலை ஒப்படைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவு நகலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், `இரண்டாவது உடல் கூராய்வில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருமுறையும் உடல் கூராய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது.
ஆனால் அரசு தரப்பு விளக்கத்தில் அதிருப்தி இருப்பதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இதைக்கேட்ட நீதிபதிகள் பெற்றோரிடம், `நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது? ஒவ்வொரு முறையும் ஏன் பிரச்னை ஏற்படுத்துகிறீர்கள்? பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. அதேநேரம் மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள்.
மாணவியின் உடல் மறு கூராய்வு உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடாததால் ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறப்போவதில்லை” என தெரிவித்தனர். பின்னர் “அந்த அறிக்கையை ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்யவும்” என உத்தரவு பிறப்பித்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பின் அந்த வழக்கு மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்படி மதியம் 12 மணிக்கு நீதிமன்றத்தில் வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தரப்பில் `நாளை காலை 6 -7 மணிக்குள் உடலை பெற்றுக்கொண்டு, மாலை 6 மணிக்குள் இறுதிசடங்கை முடிக்கவும்’ என பெற்றோருக்கும், `ஜிப்மர் மருத்துவக்குழு ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை அளிக்கவேண்டும்’ என அம்மருத்துவமனைக்கும் உத்தரவிட்டிருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM