உயர் நீதிமன்றத்தில் தினம் தினம் எத்தனையோ வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. ஒவ்வொரு வழக்கிற்கும் வழங்கப்படும் தீர்ப்புகளும், அதில் உள்ள நுணுக்கங்களும் வேறுபடும்.
அந்த வகையில் மாமியார் மன்னித்து விட்டார் என்ற காரணத்தை முன்னிறுத்தி பத்து ஆண்டுக்கால கடுங்காவல் சிறைத் தண்டனையை ரத்து செய்து மனுதாரரை ( மருமகனை ) விடுதலை செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கின் பின்னணியைப் பார்ப்போம்…
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த 2017- ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி சிவசுப்பிரமணி வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதில் குடும்ப உறுப்பினர்களிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சிவசுப்பிரமணி வீட்டில் இருந்த அரிவாள்மனையால் தனது மாமியாரைத் தாக்கியுள்ளார். இதில், மாமியாரின் முதுகில் வெட்டு ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவசுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மே மாதம் 25-ம் தேதி சேலம், மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிவசுப்பிரமணிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
சேலம் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து , சிவசுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வாதாடத் தொடங்கிய வழக்கறிஞர் பாலாஜி, ‘மனுதாரரும், அவரின் மாமியாரும் குடும்ப நலன் கருதி சமாதானம் ஆகியுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக குடும்பத்துடன் வந்துள்ளனர்’ என்ற வாதத்தை முன் வைத்துள்ளார்.
அதன் பின் நீதிமன்றத்தில் மனுதாரரின் மாமியார் ஆஜராகி, ‘ என் மகள் மற்றும் அவளின் குழந்தைகள் மருமகனுடன் சேர்ந்து வாழ வேண்டும். அதனால் அவர் என்னை அரிவாள்மனையால் வெட்டி காயப்படுத்தியதை மன்னித்துவிட்டேன். நீதிமன்றமும் அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் ‘ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
விசாரணைக்கு பின் நீதிபதி வழங்கிய தீர்ப்பு, ” ஜோஷி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘ குடும்ப பிரச்னைகளைத் தீர்ப்பதில் உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குடும்பத்தில் உள்ள பிரச்னையால் குற்றம் நடந்துள்ளது. இப்போது அவர்கள் சமாதானம் ஆகி உள்ளதால் குழந்தைகளின் நலன் கருதி, உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மனுதாரர் விடுதலை செய்யப்படுகிறார்” என்று நீதிமன்றம் அறிவித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் S.B மோசஸிடம் பேசினோம்.
” காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்தவர்கள் பின்பு மனம் மாறி வழக்கைத் திரும்பப் பெறுவது நடைமுறையில் உள்ளது. அதே வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது, வழக்கை திரும்பப் பெற இயலாது. ஆனால், நீதிமன்றத்திற்கு இது போன்ற சிறப்பு தீர்ப்புகளை வழங்க அதிகாரம் உண்டு. நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எல்லா வழக்குகளுக்குமான பொது வரையறையாக எடுத்துக்கொள்ள இயலாது. எல்லா வழக்குகளிலும் சமாதானத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் செய்யாது. ஒரு குற்றம் நடைபெற்றால் ( CRIME AGAINST SOCIETY NOT INDIVIDUAL ) குற்றம் நடந்த சூழல், பாதிக்கப்பட்டவர்களின் நிலை, பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பு, குற்றம் செய்தவர் மனநிலை, அவருக்கு உள்நோக்கம் உள்ளதா, குற்றம் தனிப்பட்டவருக்கு எதிரானதா அல்லது சமூகத்திற்கு எதிரானதா, பாதிக்கப்பட்டவர் வயது, மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து தீர்ப்புகள் ஒவ்வொரு வழக்கிலும் வேறுபடும்.
குழந்தைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வயதில் மூத்தவர்கள் போன்ற வலிமை குறைந்தவர்களின் மீதான ( CRIME AGAINST VULNERABLE COMMUNITY ) குற்றங்களை நீதிமன்றங்கள் பொதுவாக மன்னிக்காது. சிவசுப்பிரமணியன் வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மாமியார் நல்ல மனநிலையில் உள்ளவர். மேலும் பாதிப்புகளும் குறைவு என்ற நிலையில் தன் மகளுக்காகவும், பேரக் குழந்தைகளுக்காகவும் குடும்ப அமைப்பை கருத்தில் கொண்டு மனுதாரரை மன்னிப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நீதிமன்றமும் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மனுதாரரை விடுதலை செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை இந்த வழக்கிற்கான தீர்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும் ” என்று விவரித்தார்.