வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்ப்பம் அசாம் மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியரை, அம்மாநில முதல்வர் நேரில் அழைத்து சென்று அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளார்.
அசாம் மாநிலத்தின் சில்சர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் கோதானி(28). வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளியான ஓவியங்கள் வரைவதில் திறமை பெற்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றோருடன் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாவை சந்தித்தார். அப்போது அவருக்கு ஓவியம் ஒன்றை பரிசளித்த அபிஜித், பிரதமர் மோடியை சந்திக்க விரும்புவதாக கூறினார். இதனையடுத்து, ஹிமாந்தா பிஸ்வா இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், சந்திக்க அனுமதி கிடைத்தது.
இதனால், மகிழ்ச்சியடைந்த அபிஜித் தனது தாயார் மற்றும் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா உடன் டில்லி சென்று மோடியை சந்தித்தார். அப்போது, மோடிக்காக வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார்.
மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்த அந்த ஓவியத்தில் மோடி, அவரது தாயாரிடம் ஆசி வழங்குவது போலவும், ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவது போலவும், சிறுவயது முதல் பிரதமராக பதவியேற்றது வரையிலான படங்கள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக அபிஜித்தின் தாயார் கூறுகையில், எனது மகனின் படைப்புக்காக பிரதமர் முதுகை தட்டிக்கொடுத்து பாராட்டிய போது, அபிஜித்தின் கண்களில் உற்சாகத்தையும், மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டதையும் பார்க்க முடிந்தது. பிரதமரின் ஊக்கம் நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும். இது எனது மகனை இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் என்றார்.
பிரதமரை சந்தித்தது தொடர்பாக அபிஜித் சைகையில் கூறினார். அதனை தாயார் விளக்கி கூறினார். அபிஜித் கூறியதாவது: பிரதமரை தினமும் டிவியில் பார்த்த நான், இன்று நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது ஓவியத்தை பாராட்டி அழகாக உள்ளது எனக்கூறியது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. எனது முதுகை தட்டிக்கொடுத்து எனது ஓவியம் சிறப்பாக உள்ளதாக கூறினார். இன்று எனது கனவு நிறைவேறியுள்ளது. பிரதமர், மென்மையான இதயம் கொண்ட சாமானிய மனிதர். அவரை நான் சந்தித்ததை நினைத்து எனது குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள். என்னை போன்றவர்கள், அனைத்தையும் இழந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. நம்மாலும் சாதிக்க முடியம் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்றார்.
ஹிமாந்தா பிஸ்வா கூறுகையில் அபிஜித் சிறந்தவர். சிறந்த ஓவியங்களை வரைந்துள்ளார். இதனால், பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்த போது, அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற அபிஜித்தின் கனவு நிறைவேறியதால், இன்றைய நாள் அவரது நாளில் மிகப்பெரிய நாளாக இருக்கும். டில்லியில் இருந்து கிளம்பும் தாய், மகனுக்கு, வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளதக்க வகையிலும் மகிழ்ச்சியுடன் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இன்றைய நாள் அமைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement