முல்லைப் பெரியாறு அணை தகவல்கள் தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்டதா?: 3 போலீசார் இடமாற்றம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கரிமண்ணூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் அனஸ். இவர் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் குறித்த ரகசிய விவரங்களை யாருக்கும் தெரியாமல் போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் இருந்து திருடி தீவிரவாத தொடர்புடைய ஒரு இயக்கத்திற்கு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அப்போதைய எஸ்பி கருப்பசாமி உத்தரவிட்டார். இது தொடர்பாக நடந்த விசாரணையில், தீவிரவாத இயக்கத்திற்கு ரகசிய விவரங்களை அனஸ் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் மூணாறு போலீஸ் நிலையத்தில் இருந்தும் சில முக்கிய ரகசிய விவரங்கள் சில தீவிரவாத இயக்கத்தினருக்கு கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மூணாறு டிஎஸ்பி மனோஜுக்கு அப்போதைய எஸ்பி கருப்பசாமி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.போலீசாரின் பல முக்கிய ரகசிய விவரங்கள் மூணாறு போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தன. இந்த விவரங்களை கடந்த மே 15ம் தேதி யாரோ தங்களுடைய செல்போனில் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக டிஎஸ்பி மனோஜ் தலைமையிலான தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில் ரகசிய விவரங்களை பதிவு செய்தது. அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களது செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனையில் கம்ப்யூட்டரில் இருந்து ரகசிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அலியார், ரியாஸ், அப்துல் சமது ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி டிஎஸ்பி மனோஜ் இடுக்கி மாவட்டம் எஸ்பியிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் முதல் கட்டமாக இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அலியார், ரியாஸ் ஆகியோர் எர்ணாகுளம் மாவட்டத்திற்கும், அப்துல் சமது கோட்டயம் மாவட்டத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.இவர்களில் அலியார் கடந்த பல மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். எனவே இவர் அணை குறித்த விவரங்களையும் தீவிரவாத இயக்கத்தினருக்கு கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.