தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் (21) தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 8 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகமும், 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகமும் இடம்பெறுகின்றன..
நேற்று (21 ஆம் திகதி) தொடக்கம் 29 ஆம் திகதி வரை பெற்றோல் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.
மக்கள் எந்த விதமான நெருக்கடி மற்றும் குழப்பங்களை
ஏற்படுத்தாது அமைதியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை சராசரியாக 7 – 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 25 ஆம் திகதி வரையில் டீசல் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான அட்டவணை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைவாக அரசாங்கத்தினால் தேசிய எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திரம் ( National fuel Pass வெளியிடப்பட்டுள்ளது.
QR code முறை மூலமாக இதனை பெற வேண்டும்.
இதனைப் பெறுவதில் சில நடைமுறை பிரச்சினைகள் காணப்படுவதனால் அது முதல்கட்டமாக மேல் மாகாலத்திலும் அடுத்த கட்டமாக நாடு பூராகவும் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் 25ஆம் திகதிக்கு பின்னர் அமுலில் இருக்கும்.
இந்த திட்டம் யாழ் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோக பங்கீட்டு அட்டைகளை பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களின் இறுதி இலக்க அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறும்.
பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாமல் அமைதியாக அந்தந்த பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
எரிபொருள் பங்கீட்டு அட்டை இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிற மாவட்டங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் உரிய ஆவணங்களை அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டையை பெற்றுக் கொள்ள முடியும். யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்காக யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கம் மட்டுப்படுத்திய எரிபொருள் விநியோகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு எரிபொருளை பெறுபவர்கள் கட்டாயமாக மாவட்ட செயலகங்களில் முன் அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் கருப்பு சந்தை எரிபொருள் விற்பனையை தடுக்கும் முகமாக இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது பொது மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தப்படும் செயல் அல்ல. எனவே அனைவரும் ஒத்துழைத்து எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு உதவுமாறும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.