உக்ரைன் தானிய ஏற்றுமதி முடங்கியதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய உணவு நெருக்கடியிலிருந்து விடுபட உதவும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றில் உக்ரைனும் ரஷ்யாவும் வெள்ளிக்கிழமை கையெழுத்திட உள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், நீண்ட 5 மாதங்களில் இருநாடுகளும் முன்னெடுக்கும் முக்கிய ஒப்பந்தம் இதுவென கூறுகின்றனர்.
உக்ரைன் தானியங்கள் ஏற்றுமதி செய்ய தாமதமான நிலையில், உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன மற்றும் உலகின் சில ஏழ்மையான நாடுகளில் உள்ள மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தற்போது இரு நாடுகளும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவாகியுள்ள நிலையில், இஸ்தான்புல்லின் ஆடம்பரமான டோல்மாபாஸ் அரண்மனையில் கையெழுத்திடும் விழாவிற்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வரவிருக்கிறார்.
உக்ரேனிய துறைமுகங்களில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் ரஷ்ய போர்க்கப்பல்களால் தடுக்கப்பட்டு தேங்கியுள்ளன.
இந்த நிலையில், ஐநா அதிகாரிகள், துருக்கி, ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கூட்டாக கடந்த வாரம் துருக்கியில் தானியங்களின் ஏற்றுமதி தொடர்பில் கலந்தாலோசித்தனர்.
இதில் வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடும் முடிவுக்கு நான்கு தரப்பும் எட்டியுள்ளது.
ஆனால் தங்கள் நாட்டின் மீதான ஏற்றுமதி தடையையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளாடிமிர் புடின் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த சிக்கலை நாங்கள் தீர்க்கும்போது, உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கான ஏற்றுமதி பாதை மட்டும் திறக்கப்படாது, ரஷ்யாவில் இருந்து தயாரிப்புகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என துருக்கி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவில் இருந்து தானியங்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அனுமதி அளித்துள்ளதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், உக்ரைன் கடல் பகுதியில் ரஷ்ய கப்பல்களை அனுமதிக்க முடியாது என உக்ரைன் தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.