ரஷ்யாவின் Nord Stream 1 பராமரிப்பு பணிகளுக்கு பின்னர், ஜேர்மனிக்கான எரிவாயு வழங்கலை மீண்டும் துவங்கியிருந்தாலும், இனி ரஷ்யாவை நம்ப முடியாது என ஜேர்மனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக, நாட்டின் எரிவாயு நுகர்வு அளவை குறைக்க அவசர நடவடிக்கைகள் தொடர்பில் புதிய அறிவிப்பை ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து எரிவாயு விநியோகம் எத்தனை நாள் தொடரும் என்பதை நம்ப முடியாது என்றும், எரிசக்தியை சேமிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் ராபர்ட் ஹேபெக் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், முடிந்தவரை பெரிய கட்டிடங்களில் வெப்பம் ஏற்றும் அமைப்புகளை அணைக்கவும், திறனற்ற வெப்ப அமைப்புகளை அகற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை முன்னெடுக்கவும், தனியார் நீச்சல் குளங்களை சூடாக்க எரிவாயு பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தற்போது வழங்கிவரும் 40% எரிவாயு என்பது இந்த குளிர்காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைத் தடுக்காது என்று நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துவரும் நிலையில், ஒற்றுமையை குலைக்கும் வகையில் ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளதுடன், அதிகமாக எரிவாயு வாங்குவது தொடர்பில் விளாடிமிர் புடின் நிர்வாகத்துடன் ஆலோசனை முன்னெடுக்க உள்ளார்.
நாட்டின் எரிசக்தி வழங்கலில் தடங்கல் ஏற்படாத வகையில், மேலதிகமாக ரஷ்யாவிடம் இருந்து 700 மில்லியன் கன மீற்றர் இயற்கை எரிவாயுவை வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.