ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் `கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழகத்தின் அரசியல், சினிமா, இலக்கிய ஆளுமைகள் தங்கள் பயணம் குறித்தும், சமூகப் பார்வை குறித்தும் பேராசிரியர் பர்வீன் சுல்தானாவுடன் இதில் உரையாடுவார்கள். அதில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன் பேராசியர் பர்வீன் சுல்தானா இணைந்து நடத்திய நேர்காணலின் இரண்டாம் பாகம் இதோ…
நீங்கள் அரசியலைத் தாண்டி, ஒரு இயற்கை ஆர்வலராகவும் இருந்துள்ளீர்கள். அதுகுறித்து…
அறத்திலே சிறந்த அறம், மரம் நடுவது. அதற்காக `பசுமை தாயகம்’ என்றொரு அமைப்பைத் தொடங்கினேன். அது இன்று ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாலாறு, பவானி ஆறு இரண்டும் மாசுபட்டிருக்கும் போது வாழையாறிலிருந்து வாணியம்பாடி வரை மூன்று நாட்கள் நான் சைக்கிளிலேயே பிரசாரம் செய்தேன். ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் வரை சைக்கிளில் செல்வேன். அப்படியே ஏதாவது ஒரு ஊரில் இரவு ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் அடுத்த நாள் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்துவிடுவேன். அதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி வரை 150 கிலோமீட்டர் ஒருமுறை பயணம் செய்தோம். நான் மருத்துவராக இருந்தபோது மருத்துவமனைக்கு முன்பு தென்னை மரத்தின் பயன்களை அதுவே விளக்குவது போல ஒரு கவிதை எழுதி, தென்னை பேசுகிறது என்றொரு போர்டு வைத்திருந்தேன். அதே போல பனைமரத்தின் பயன்கள் குறித்து குறும்படம் ஒன்று எடுத்திருக்கிறேன்.
தமிழகத்தில் மது ஒழிப்பு சாத்தியமா?
மதுவிலக்கு தற்போது பீகாரில் சாத்தியமாகியிருக்கிறது. பூரண மதுவிலக்கு குறித்து அன்றே பல தலைவர்கள் சொல்லி வந்தனர். இன்று சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு முழுமுதற் காரணமாக இருப்பது மதுதான். இன்று பெண்கள் சுதந்திரமாக சாலையில் நடமாட முடிவதில்லை. இதற்கு காரணம் மது குடிப்பவர்கள் மீதான பயம்தான். ஆனால் மதுவை அகற்றிவிட்டால் நாட்டில் வருமானம் குறைந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். இதுகுறித்து அண்ணா, `மது என்பது குஷ்டரோகமுள்ளவன் கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது’ என்றார். கருணாநிதி மதுஒழிப்பை கொண்டு வரும் போது ராஜாஜி அவரை இல்லத்தில் சென்று சந்தித்து, தடுத்து நிறுத்தினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மது ஒழிப்பு மாநாடு நிகழ்த்தினேன்.
அரசியிலில் இவ்வளவு ஆண்டுகாலம் இருந்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?
நிச்சயமாக. யாருக்கு தான் இருக்காமல் இருக்கும். எங்களுடைய செயல்பாடுகளை ஊடகங்கள் பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. எங்களுடைய தேர்தல் அறிக்கையில் உள்ள கொள்கைகளைப் பார்த்து இரு கட்சிகள் அதை தங்கள் அறிக்கையில் சேர்த்துக் கொண்டார்கள். மக்கள் கொள்கைகளை பெரிதாக மதிப்பதில்லை. யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்கள் என்று தான் பார்க்கின்றனர். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி போன்ற முன்னெடுப்புகளுக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்காதது இதனால் தான்.
இன்றைய கல்விமுறை பற்றிய தங்களது கருத்து என்ன?
கல்வி என்பது ஒருபோதும் மாணவர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது. இன்று ஆறு வயது குழந்தை ஒரு மூட்டை பையை சுமந்துக்கொண்டு கீழே தரையை பார்த்தப்படியே செல்கிறது. நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை எங்கு இருக்கிறது. அதனால் சுகமான கல்வி, சுமையில்லா கல்வி வேண்டும். மாணவர்கள் குறைந்தது தினம் ஒருமணி நேரமாவது விளையாட வேண்டும். அம்பானி பேர குழந்தைகளுக்கு கிடைக்கூடிய கல்வி சாதாரண ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். கட்டாயக் கல்வி, கட்டணமில்லா கல்வி. இதுதான் எங்கள் கட்சியின் கல்விக் கொள்கை.
பேட்டியை வீடியோ வடிவில் காண…