Rishabh Pant – Shoaib Akhtar Tamil News: இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணமாக சென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்தாண்டு கொரோனா காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டு விளையாடியது. இதில் முதலில் நடந்த கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் தொடர் 2-2 என்கிற கணக்கில் சமமானது. எனவே, இரு அணி வீரர்களும் கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்கிற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்கிற கணக்கிலும் என இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. டி-20 தொடரின் நாயகன் விருதை இந்திய வீரர் புவனேஷ்வர் குமாரும், ஒருநாள் தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா-வும் வென்று அசத்தினர்.
பண்ட் அசத்தல் ஆட்டம்…
இங்கிலாந்து – இந்தியா அணிகள் கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடரில், இந்திய அணி முதலாவது போட்டியை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து 2வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது. இதனால், தொடர் 1-1 என்கிற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனைத்தொடர்ந்து, தொடரை கைப்பற்றும் முனைப்பில் இவ்விரு அணிகளும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியை ஆட களமிறங்கி இருந்தன. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 260 என்கிற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 42.1 ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு வித்திட்டவர் இளம் வீரர் ரிஷப் பண்ட் என்றால் நிச்சயம் மிகையாகாது. இந்திய அணியினர் 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியபோது நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடினார் பண்ட். அவருடன் ஜோடியில் இருந்து ஆல்ரவுண்டர் வீரர் ஹர்டிக் பாண்டியாவுடன் திட்டங்களை தீட்டி, அதற்கேற்றாற்போல் மட்டையை சுழற்றி அசத்தினார். மேலும், சீரான இடைவெளியில் பவுண்டரிகளை ஓடவிட்டும், கூடவே 2 சிக்ஸர்களை பறக்கவிட்டும் ஒருநாள் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இப்படியான அவரின் பொறுமையான ஆட்டத்திற்கும், மேம்பட்ட திறனுக்கும் இந்திய டக்-அவுட்டில் அமர்ந்திருந்த தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் முதல் அணியின் கடைசி ஊழியர்கள் வரை அனைவரும் அவருக்கு எழுந்து நின்று கை தட்டி உற்சாகப்படுத்தினர். சதம் அடித்த கையோடு, தொடர்ந்து 5 பவுண்டரிகளையும், ஆட்டத்தை முடித்து வைக்க ஒரு பவுண்டரியை ஓடவிட்டு பண்ட் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
பண்ட் ஆடுகளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எப்போதும் துறுதுறுவென என இருப்பவர். இங்கிலாந்து மண்ணில் அவரின் ஆட்டம் அவரை கிரிக்கெட் உலகில் இருக்கும் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. அவரின் ஆட்ட நுணுக்கம் முதல் அவர் பந்தை சந்தித்த விதம் வரை அவர் குறித்து முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்டை பாராட்டி பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பண்ட் ஒரு அச்சமற்ற கிரிக்கெட் வீரர், அவர் தனது ஆயுதக் களஞ்சியத்தில் எதிரணியைத் தொந்தரவு செய்யும் பல்வேறு ஷாட்களை கைவசம் வைத்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், பண்ட் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்தி உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றிய சமீபத்திய வீடியோவில், “ரிஷப் பண்ட் ஒரு அச்சமற்ற கிரிக்கெட் வீரர். அவர் கட் ஷாட், புல் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் மற்றும் பேடில் ஸ்வீப் என பல்வேறு ஷாட்களை கைவசம் வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வென்றார். இங்கு (இங்கிலாந்தில்) போட்டியை வென்று இந்தியாவை ஒரு முக்கிய இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். தொடரை தனி ஒருவனாக வென்றேடுத்துள்ளார்.
ஆனால், அவர் கொஞ்சம் உடல் எடை அதிகமாக இருக்கிறார். அதை அவர் கவனமாக பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். ஏனென்றால் இந்திய மார்க்கெட் பெரியது. அவர் நல்ல தோற்றம் கொண்டவராகவும் இருப்பதால், அவர் ஒரு மாடலாக தோன்றலாம். கோடிகளை சம்பாதிக்கலாம். ஏனென்றால், எப்பொழுது ஒருவர் இந்தியாவில் சூப்பர் ஸ்டாராக மாறுகிறார்களோ, அப்போதெல்லாம், அவர்கள் மீது நிறைய முதலீடுகள் செய்யப்படுகிறது,” என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil