சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாயில் நினைவாலயம் கட்ட முடிவு செய்துள்ள ஸ்டாலின் தலைமை யிலான தமிழகஅரசு, தற்போது, கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், சென்னை மெரினா கடலில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா சிலை ரூ.80 கோடி செலவில் அமைக்க திட்டமிட்டு உள்ளது.
ன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதை அடுத்து அவரது உடன் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அத்துடன் அவரது எழுத்தாற்றலை நினைவு கூறும் வகையில், அவர் உபயோகப்படுத்திய பேனாவும், அவருடன் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படும் என சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் தெரிவித்தார். அதன்படி, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.
மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது. அந்த நினைவிடத்தின் முன்பகுதியில் முகத்தில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க அரசு திட்டமிட்டிருக் கிறது. இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும். ரூ.80 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்படுகிறது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மறைந்த கருணாநிதி, பன்முகத்தன்மை கொண்டவர். இலக்கியவாதி, கவிஞர், வசன கர்த்தா, எழுத்தாளர் என பல்வேறு துறையில் திறன் பெற்றவர். கட்சியின் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவது முதல், நாடகம், திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் என எழுதி சாதனை படைத்தள்ளனர். தொல்காப்பியம் உள்பட பல்வேறு நூல்களையும் எழுதி உள்ளார். அவரது எழுத்தாற்றலை போற்றும் வகையில் கடலுக்குள் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்க அவரது மகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.