ரேடியோ மெக்கானிக்காக மாறியிருப்பேன் : ஏ.ஆர்.ரஹ்மான்
பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் தயாரான மலையான் குஞ்சு படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, அறிமுக இயக்குனர் ஷஜிமோன் பிரபாகர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஸ்வரூபம் பட எடிட்டரும் பஹத் பாசிலை வைத்து டேக் ஆப், சி யூ சூன் மற்றும் மாலிக் ஆகிய படங்களை இயக்கியவருமான மகேஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இதற்கெல்லாம் மேலாக இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியாகும் படம் இது. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன் என தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நான் கடந்த 2020ல் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பஹத் பாசில் இ-மெயில் மூலமாக இந்த கதை குறித்து எனக்கு ஒரு வீடியோ அனுப்பி, இதற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என கேட்டிருந்தார். நான் அவரை துபாய்க்கு வரமுடியுமா என கேட்டதும் அவரும் மகேஷ் நாராயணனும் என்னை வந்து சந்தித்து கதை சொன்னார்கள். துபாய் எக்ஸ்போ தவிர பொன்னியின் செல்வன் பட வேலைகளும் இருந்ததால் இந்தப்படத்திற்கு எப்படி நேரம் ஒதுக்குவது என யோசித்து அதை அவர்களிடமும் கூறினேன்..
ஆனால் அந்தப்படத்தில் பஹத் பாசிலின் ரேடியோ மெக்கானிக் கதாபாத்திரம் எப்படியோ இந்தப்படத்திற்கு இசையமைக்க என்னை உள்ளுக்குள் இழுத்து விட்டது.. ஆம், என் அம்மா மட்டும் எனக்கு இசையை அறிமுகப்படுத்தாமல் போயிருந்தால், நான் ரேடியோ மெக்கானிக் ஆக ஆகியிருப்பேன். அதனால் பஹத் பாசிலின் கதாபாத்திரத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதனால் எப்படியாவது நேரத்தை ஒதுக்கி மலையான் குஞ்சு படத்திற்கு இசையமைப்பது என முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்..