கனடாவின் ரொறன்ரோ மற்றும் வான்கூவரில் வீடு ஒன்றை வாங்க ஒருவரின் ஆண்டு வருமானம் 220,000 டொலராக இருக்க வேண்டும் என புதிய தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மட்டுமின்றி முன்பணமாக 20 சதவீதம் செலுத்தும் பொருளாதார நிலையையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.
உண்மையில் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் பகுதிகளில் வீட்டின் விலை சரிவடைந்தே காணப்படுகிறது.
இருப்பினும், இப்பகுதிகளில் வீடு வாங்குவதற்கு அதிக வருவாய் ஈட்டும் நிலை நீடிக்கிறது. ரொறன்றோவில் வீடு வாங்குபவர்கள் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது $15,750 அல்லது ஏழு சதவீதம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.
இதேப்போன்று வான்கூவரில் இருப்பவர்கள் $31,730 அல்லது 16 சதவீதம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க, அனைத்து கனேடிய நகரங்களிலும், வீடு ஒன்றை வாங்குவதற்குத் தேவையான ஆண்டு வருமானம் கடந்த நான்கு மாதங்களில் சராசரியாக $18,000 அதிகரித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு, அதாவது $35,760 அல்லது கூடுதல் வருமானத்தில் 23 சதவீதம் தேவை என தெரியவந்துள்ளது.
இதனிடையே, வேகமாக அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக சமீபத்திய மாதங்களில் கனேடிய வீட்டு விலைகள் சரிவடைந்தே காணப்படுகின்றன.
மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் ஒரு வீட்டின் சராசரி விலை 1.9 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும், தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஜூன் மாதத்தில் 2005 க்குப் பிறகு மிகப்பெரிய அளவில் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.