விவசாயத்துக்கு உதவும் சமூக ஊடகங்கள்… மாதா, பிதா, கூகுள், தெய்வம்!

காற்று, தண்ணீர் போல தொலைக்காட்சியும், மொபைல் போனும் நம் வாழ்வில் ஒன்றிவிட்டன. இவற்றை பொழுதுபோக்குக்கு மட்டுமல்லாமல் விவசாயத்தில் லாபம் பெறவும் பயன்படுத்தலாம்.

பசுமை விகடன் கடந்த ஜூலை 16-ம் தேதி ‘வெற்றிகரமான விவசாயத்துக்கு வானொலி, டி.வி, பத்திரிக்கை, யூடியூப்… பயன்படுத்தி கொள்வது எப்படி?’ என்ற நேரலை நிகழ்ச்சியை நடத்தியது.

விவசாயம்

இதில் வேளாண்மை ஆராய்ச்சியாளர், 50 ஆண்டுகளாக கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர் மற்றும் அகில இந்திய வானொலியின் முன்னாள் பண்ணை இல்ல ஒலிபரப்பு அலுவலர் தே.ஞானசூரிய பகவான் (சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்) விவசாயம் குறித்த பல தகவல்களையும் நுணுக்கங்களையும் பகிர்ந்தார்.

இந்த நேரலை நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஜூம் மீட் வாயிலாக நடந்தது. இதில் விவசாயிகள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நேரலை நிகழ்ச்சியின் சுருக்கம் இதோ…

இந்தியாவின் ஜனத்தொகை 141.2 கோடியாக உள்ளது. இதில் கிட்டத்தட்ட 47% மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. வலைத்தளம் என்பது ஒரு அறிவியல். அறிவியலை வேண்டாம் என்று நாம் ஒதுக்க முடியாது.

கூகுள் தேடலில்

முன்பெல்லாம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று இருந்தது. இப்போது மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்றாகிவிட்டது. அந்தளவுக்கு கூகுள் குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டது. இன்றைக்கு பல செய்திகளை திரட்டுவதற்கு வலைத்தளம் தான் உதவுகிறது. நிச்சயம் ஊடகங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம்.

விவசாயம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை காப்பது மிக மிக முக்கியம். சீனாவுக்கு அடுத்தப்படியாக விவசாயத்தில் இந்தியா அதிக உற்பத்தி செய்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் கூட நமது உற்பத்தி குறையவில்லை. அதற்கு விவசாயிகளின் கடின உழைப்பு தான் காரணம். விவசாயத்தில் இன்னும் கவனம் செலுத்தினால் நாம் சீனாவை மிஞ்ச முடியும்.

மதிப்பு கூட்டுதல்

விவசாயத்தில் நாம் நெல் மட்டும் உற்பத்தி செய்தால் மதிப்பு கிடையாது. அதை அரிசியாக மாற்றினால்தான் மதிப்பு. ஆக, பிற தொழில்களைவிட விவசாயத்தில் மதிப்பு கூட்டுதல் என்பது மிக முக்கியமானது. இதற்காக அரசு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மதிப்பு கூட்டுதல் தொழிற்சாலையை அமைக்க வேண்டும்.

நெல் வயலில்

இதன் மூலம் வேளாண்மை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். விவசாயிகள் நேரடியாக தங்களது உற்பத்தி பொருட்களை விற்க முடியும். இதன் மூலம் அரசாங்கமே விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை நல்ல விலைக்கு வாங்க முடியும். மேலும் உபரி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் பெறும் வாய்ப்பும் கிட்டும்.

விவசாயிகள் தங்களது இடங்களுக்கு ஏற்ப பயிர் திட்டங்களை மாற்ற வேண்டும். மேலும் கீரை, பூப்பயிர், காய்கறி போன்ற தினசரி பயிர்களை பயிரிட்டு லாபம் பெறலாம்.

சொட்டுநீர் பாசனம்

சொட்டுநீர் பாசனம் போட்டால் ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள தண்ணீரை இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்களுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் இரண்டு அல்லது மூன்று மடங்கு வருமானம் பெறலாம்.

சொட்டுநீர்ப் பாசனம்

உலக நாடுகளை விட ஆண்டுக்கு இரண்டு மடங்கு (1200 மி.மீ.) மழை பெறும் இந்தியாவில், 40% நிலத்திற்கு மட்டுமே பாசன வசதி உள்ளது. இந்த 40% நிலங்களில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் சாகுபடி மற்றும் லாபத்தை குறைந்தபட்சம் 80% உயர்த்த முடியும். இதற்காக நாம் ஆண்டு திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.

நீர் நன்றாக கிடைத்தால் நிலத்தில் ஈரம் பெருகும். நிலத்தில் ஈரம் பெருகினால் அதில் தாவரங்கள் மற்றும் மரங்கள் நல்ல செழிப்பாக வளரும். இப்படி நிலம் நன்றாக இருந்தால் விவசாயிகள் நன்றாக இருப்பர்.

நீர் வாரியம் அவசியம்

தமிழகத்தில் 33 முக்கிய நீர் வழி பகுதிகள் ஓடுகிறது. இதில் தாமிரபரணி மட்டுமே வருடம் முழுவதும் ஓடக்கூடிய ஜீவநதியாக இருக்கிறது. மீதமுள்ள நதிகளையும் ஜீவநதியாக மாற்ற முடியும். இதை தான் ராஜஸ்தானை சேர்ந்த ராஜேந்திர சிங் செய்து காட்டி இருக்கிறார். 100 ஆண்டுகளாக வற்றி போயிருந்த கிட்டத்தட்ட 7-8 நதிகளை மீண்டும் ஜீவநதிகளாக மாற்றியுள்ளார். இதற்காக அவர் நதிகளின் நீர்வழி பகுதிகளில் கசிவு நீர் குட்டையை வெட்டி தண்ணீர் தவழும் நதியாக மாற்றியுள்ளார்.

ஒவ்வொரு ஆற்றிற்கும் இரண்டு ஆறுகள் உண்டு – துணை ஆறு மற்றும் கிளை ஆறு. இந்த ஆறுகளை குடிமாரமத்து செய்தாலே ஆறுகள் நன்றாக ஓடும். நீர் மற்றும் ஏரி பிரச்னைகள் குறித்து பேச ஒவ்வொரு கிராமத்திலும் நிச்சயம் ஒரு நீர் வாரியம் அமைக்க வேண்டும்.

காவிரி ஆறு

உலகில் அதிகம் மழைபொழியும் சிரபுஞ்சி மற்றும் மவ்சின்ராம் பகுதிகளில்கூட மழை நீரை சேமிக்காததால் தண்ணீர் பஞ்சம் உள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் பஞ்சம் வரும் வாய்ப்புண்டு. இதனால் மழை நீரை அறுவடை செய்தால் மட்டுமே அவற்றை பயிர் சாகுபடிக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியும். நமது நீர் பிரச்னைக்கு காரணம் மழை பற்றாக்குறையோ, தண்ணீர் பற்றாக்குறையோ கிடையாது. நாம் மழை நீரை சரியாக அறுவடை செய்யாதது தான் காரணம். மழை வரும்போது நீரை கண்டிப்பாக சேமிக்க வேண்டும். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு கிணறுகளையும் மழை அறுவடை செய்யும் தொட்டிகளாக மாற்றி பயன்படுத்த முடியும். மேலும் வறண்டு போன கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் நீர் உறிஞ்சி குழிகளை அமைத்தால் மீண்டும் அவற்றை உயிர்ப்பிக்க முடியும்.

நபார்டு வங்கி சில இந்தியர்களை தேர்ந்தெடுத்து வடகிழக்கு பிரேசில்லுக்கு அழைத்து சென்றது. அங்கே 10,00,000 வீடுகளில் கூரை நீரை அறுவடை செய்கிறார்கள். இப்படி நாமும் நம் கூரைகளில் இருந்து வடியும் நீரை சேமித்து கோடை காலங்களில் பயன்படுத்தலாம்” என்பது உள்ளிட்ட பல ஆலோசனைகளை வழங்கினார், சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்.

நிகழ்ச்சியின் வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

http://bitly.ws/sXty

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.