14 மாதங்களில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.. சொல்கிறார் செந்தில் பாலாஜி..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புளியந்தோப்பில் உள்ள துணை மின் நிலையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு.

பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம்.

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.

அதேபோல், நிலைக்கட்டணம் ரத்து செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். தற்போது, மின் கட்டண மாற்றத்தின் மூலம் நிலைக் கட்டணத்தை ரத்து செய்திருக்கிறோம். இப்போது, 2 மாதத்திற்கு ஒரு முறை வீடு வீடாக மின் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது 1000 பணியாளர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், மாதந்தோறும் கணக்கு எடுப்பதற்கு 2000 பணியாளர்கள் தேவை.

எனவே, மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டும்.

டிரான்ஸ்பார்மர்களுக்கும் மீட்டர் பொருத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது டெண்டர் நிலையில் உள்ளது.

அதேபோல், அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் கணக்கெடுக்கும் பணியாளர்களின் வேலை கேள்விக்குறியாகிவிடும். எனவே, இதில் ஏதாவது ஒன்றுதான் கொண்டு வர முடியும்.

அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு நிச்சயமாக திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி மாதந்தோறும் கணக்கீடு செயல்படுத்தப்படும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டுகள் கால அவகாசம் உள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 14 மாதங்கள்தான் ஆகிறது. இந்த 14 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார்.

மீதமுள்ள 30 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. 4 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த தேர்தலில் இதுபற்றி கேள்வி எழுப்பலாம்” என்று அவர் கூறினார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.