டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்றுக் கொடுத்த நீரஜ் சோப்ரா இப்போது மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டும் இடத்தில் நிற்கிறார்.
அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதுமிருந்தும் உச்சத்திலிருக்கும் பல தடகள வீரர் வீராங்கனைகளும் இந்தத் தொடரில் பங்கேற்றிருக்கின்றனர். இந்தியா சார்பிலும் பலரும் அமெரிக்காவில் முகாமிட்டிருக்கின்றனர்.
இந்தத் தொடரில் ஈட்டி எறிதலுக்கான தகுதிச்சுற்று போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்திருந்தது. இதில், ஒலிம்பிக்ஸ் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றிருந்தார். மொத்தம் 27 வீரர்கள் இந்த தகுதிச்சுற்றில் பங்கேற்றிருந்தனர். இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற வேண்டுமெனில் 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசியாக வேண்டும். அப்படி வீசிவிடும்பட்சத்தில் சந்தேகமே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று விடலாம். இல்லையேல், எல்லா வீரர்களும் வீசி முடித்த பிறகு தரவரிசையின் அடிப்படையில் முதல் 12 இடங்களுக்குள் வருபவர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற முடியும். இதுதான் ஆட்டமுறை.
நீரஜ் சோப்ராவுக்கு இந்த 83.50 மீட்டர் தூரமெல்லாம் பெரிய சிரமமான விஷயம் கிடையாது. டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்கு பிறகு 3 தொடர்களில் நீரஜ் சோப்ரா பங்கேற்றிருக்கிறார். அந்த மூன்றில் இரண்டில் வெள்ளியும் ஒன்றில் தங்கமும் வென்றிருக்கிறார். இரண்டு முறை தன்னுடைய தேசிய ரெக்கார்டை தானே முறியடித்திருக்கிறார். அவருடைய கரியர் பெஸ்ட்டாக 89.94 மீ ஐயும் பதிவு செய்திருக்கிறார். இந்த 3 தொடர்களிலுமே குறைந்தபட்சமாக 84 மீட்டருக்கு மேல்தான் வீசியிருக்கிறார். 84 மீட்டருக்கு கீழ் ஒரு வீச்சை கூட வீசவில்லை. ஆகையால்தான் அவருடைய தற்போதைய ஃபார்ம் படி இந்த தகுதிச்சுற்றுக்கு தேவையான 83.50 மீட்டர் தூரத்தை எளிதில் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததை போலவே நீரஜ் சுலபமாக சாதித்தார். ஒரு வீரருக்கு மூன்று வாய்ப்புகள் இந்த தகுதிச்சுற்றில் வழங்கப்படும். நீரஜ்தான் முதலில் ஈட்டியை கையில் வாங்கினார். மூன்று வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தவில்லை. முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டருக்கு ஈட்டியை பாய்ச்சிவிட்டார். அந்த ஒரே வீச்சிலேயே இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றுவிட்டார்.
இறுதிப்போட்டி 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நீரஜ் சோப்ரா அந்த இறுதிப்போட்டியிலும் இதேபோன்று சிறப்பாக செயல்படும்பட்சத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகும். அப்படி பதக்கம் வெல்லும்பட்சத்தில் அது இந்திய விளையாட்டுத்துறையில் மிக முக்கிய தருணமாக பதிவாகும். ஏனெனில், இதற்கு முன் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வெல்லப்பட்டிருக்கிறது. 2003 இல் பாரிஸில் நடந்த சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதல் வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்திருந்தார். அதன்பிறகு, இந்தியா சார்பில் வேறு யாருமே பதக்கம் வென்றதில்லை.
ஏறக்குறைய 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தியாவின் இந்த பதக்க ஏக்கத்தை நீரஜ் சோப்ரா தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது அவ்வளவு சுலபமும் கிடையாது. சில வீரர்கள் கடுமையாக போட்டியளிக்கக்கூடும். க்ரூனாடைவை சேர்ந்த Anderson Peters இந்த சீசனில் மட்டும் 3 முறை 90 மீட்டர் தூரத்தை தாண்டியிருக்கிறார். இந்த தகுதிச்சுற்றிலுமே அதிக தூரம் வீசியிருப்பவர் இவர்தான். இவருக்கு அடுத்த இடத்திலேயே நீரஜ் சோப்ரா இருக்கிறார். மூன்றாம் இடத்திலிருக்கும் Julian Weber உம் இந்த சீசனில் 90 மீ தூரத்தை தாண்டியிருக்கிறார். செக் குடியரைசை சார்ந்த Vadlejch ஏறக்குறைய நீரஜின் பெஸ்ட்டான 89.94 க்கு நெருக்கமாக வந்திருக்கிறார்.
இந்த மூன்று பேருமே தகுதிச்சுற்றில் நீரஜை போலவே முதல் வாய்ப்பிலேயே பெரிதாக வீசி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கின்றனர். இறுதிப்போட்டியில் நீரஜூக்கு கடுமையான போட்டியளிக்கப் போவதும் இந்த மூவர்தான். ஒலிம்பிக்ஸை போன்றே நீரஜ் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டுமெனில் மாபெரும் சவாலே அவருக்கு காத்திருக்கிறது. நீரஜ் சோப்ராவின் தற்போதைய ஃபார்ம் மற்றும் அவரின் சீரான பெர்ஃபார்மென்ஸ்களை பார்க்கும் போது தங்கம் இல்லாவிடிலும் எதோ ஒரு பதக்கத்தை நிச்சயம் வெல்வார் என்றே நம்பப்படுகிறது.
இதே ஈட்டி எறிதல் போட்டியில் இன்னொரு இந்திய வீரரான ரோஹித் யாதவும் பங்கேற்றிருந்தார். அவர் 80.42 மீ தூரத்திற்கு ஈட்டியை வீசியிருந்தார். நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறாவிடிலும் தரவரிசையின் அடிப்படையில் 11 வது இடம் ரோஹித்திற்கு கிடைத்தது. அவரும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்டார். இவர் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு ரொம்பவே குறைவு. இவருடைய தனிப்பட்ட ரெக்கார்ட் 82.54 மீட்டராக இருக்கிறது. அதை முறியடித்தாலே ஒரு சாதனைதான்.
வேறு சில போட்டிகளிலும் சில இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தாலும், யதார்த்தத்தில் நீரஜ் சோப்ரா மட்டுமே பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எதிர்பார்ப்பின்படியே நீரஜ் சாதிக்கும்பட்சத்தில் அது இந்திய தடகளத்திற்கே ஒரு புது இரத்தம் பாய்ச்சியதை போன்று இருக்கும். வெல்லட்டும்!
-உ.ஸ்ரீராம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM