2020ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் யாருக்குக் கிடைக்கும்?

2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று(ஜூலை 22) அறிவிக்கப்பட உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப் போனது. 2020ம் ஆண்டிற்கான அறிவிப்பு 68வதுதேசிய திரைப்பட விருதுகளுக்கானது.

2020ம் ஆண்டில் கொரோனா தாக்கம் வந்து தியேட்டர்கள் பல மாதங்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், வழக்கத்தை விட குறைவான படங்களே வெளிவந்தன. அவற்றோடு புதிதாக ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான படங்களும் உள்ளன.

2020ம் ஆண்டில் தியேட்டர்களில் சுமார் 85 படங்களும், ஓடிடி தளங்களில் சுமார் 24 படங்களும் வெளியாகின. இவற்றில் தேசிய விருதுகளுக்காக அனுப்பப்பட்ட படங்களில் இருந்து விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்வார்கள்.

அந்த ஆண்டில் தியேட்டர்கள், ஓடிடிக்களில் வந்த படங்களில், “சூரரைப் போற்று, க.பெ.ரணசிங்கம், கன்னி மாடம், காவல் துறை உங்கள் நண்பன்” உள்ளிட்ட சில படங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் உதயநிதி நடித்து வெளிவந்த வந்த “சைக்கோ”, ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்”, கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்”, மாதவன், அனுஷ்கா நடித்த 'சைலன்ஸ்', நயன்தாரா நடித்த “மூக்குத்தி அம்மன்” உள்ளிட்ட சில படங்கள்தான் அந்த ஆண்டில் வெளியான விருதுக்காகவும் எடுக்கப்பட்ட சில படங்கள் எனச் சொல்லலாம்.

“ஓ மை கடவுளே, திரௌபதி, தர்பார், பட்டாஸ், வானம் கொட்டட்டும், ஜிப்ஸி,” ஆகிய படங்களும் அனுப்பப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

ஓடிடியில் வெளியான படங்கள் சென்சார் சான்றிதழ் பெற்றிருந்தால் அப்படங்களும் தேசிய விருதுகளுக்கான போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.