புதுடெல்லி: ‘கடந்த 2021ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த திருமணமாகாத 25 வயது பெண், பரஸ்பர சம்மதத்தின் பேரில் பாலியல் உறவால் கர்ப்பம் அடைந்தார். இதனால் உருவான கர்ப்பத்தை கலைக்க, அப்பெண் முடிவு செய்தார். ஆனால், கர்ப்பமாகி 24 வாரங்கள் ஆனதால், சட்டரீதியான பிரச்னை எழுந்தது. இதனால், கர்ப்பத்தை கலைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அந்த பெண் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சந்திராசூட், சூர்யகாந்த் மற்றும் போபண்ணா அமர்வில் நேற்று வழக்கை விசாரித்து, ‘கருக்கலைப்பு சட்டத்தில் 2021ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தவறாக புரிந்து கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த விதியில், ‘கணவர்’ என்ற வார்த்தைக்கு பதிலாக, ‘துணை’ என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம். இருப்பினும், மனுதாரரை எய்ம்ஸ் மருத்துவக் குழு உடல்நீதியாக பரிசோதனை செய்து, சான்றிதழ் வழங்கினால் கருக்கலைப்பு செய்ய எந்த தடையும் இல்லை,’ என உத்தரவிட்டனர்.