பிரித்தானியாவில் அனைத்து ரயில் சேவைகளும் அடுத்த வாரம் 24 மணி நேரத்திற்கு ஸ்தம்பிக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
குறித்த வேலை நிறுத்தத்தில் மொத்தம் 40,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஊதியம், வேலை வாய்ப்பு மற்றும் நிபந்தனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையிலேயே ஜூலை 27ம் திகதி ரயில் சேவைகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் வகையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே, இன்னொரு பேரிடியாக ஜூலை 30 அன்று அஸ்லெஃப் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ள வேலைநிறுத்தத்தில் எட்டு ரயில் நிறுவனங்களின் ரயில் சாரதிகள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
27ம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் வேலை நிறுத்தமானது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காத நிலையில் வேறு வழியில்லை எனவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு தாங்கள் இன்னும் தயாராக இருப்பதாகவும், கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வேலை நிறுத்தத்தின் தேவை ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.