நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75வது சதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அசாதி கா அம்ரித் மோட்சாவ்) என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, ‛ஹர் கர் ட்ரையாங்கா’ இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டும் நாம் அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், அதை ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம்.
ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்க விட வேண்டும். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், இன்று ஜூலை 22 நமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள். 1947 ஆம் ஆண்டு இதே நாளில் தான் நமது தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது. நமது மூவர்ணக் கொடி மற்றும் பண்டிட் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடியுடன் தொடர்புடைய குழுவின் விவரங்கள் உள்பட வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை, பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.