9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய்

வாஷிங்டன்,

1948 முதல் 1955 ஆண்டு வரை உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் நோய் போலியோ. இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்பட்ட போலியோ உலக அளவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதன் பின் போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனாலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் குழந்தைகளுக்கு பரவி வருகிறது.

இதற்கிடையில், நாட்டில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக 1979 ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. ஆனால், அவ்வப்போது சிலருக்கு போலியோ கண்டறியப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்த 7 மாத பச்சிளம் குழந்தைக்கு போலியோ உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்காவில் போலியோ கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் இளம்பெண் ஒருவருக்கு போலியோ உறுதி செய்யப்பட்டுள்ளது. ராக்லெண்ட் நகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். போலியோ பாதிக்கப்பட்ட இளம்பெண் வெளிநாடுகளுக்கு எங்கும் செல்லவில்லை என்றும் அவருக்கு வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பின் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் சுகாதாரத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.