ஆறு முறை இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, தற்போது இலங்கையின் அதிபராகப் பதவியேற்றிருக்கிறார். நேற்று முந்தினம் (ஜூலை 20) நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், 134 எம்.பி-க்களின் ஆதரவைப் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று (ஜூலை 21) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ஜெயந்த ஜெயசூரியா முன்னிலையில், இலங்கையின் அதிபராகப் பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க. கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ரணிலை, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?!
மக்கள் புரட்சி காரணமாக நாட்டைவிட்டுத் தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே, ஜூலை 14 அன்று தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் `பதில்’ அதிபராக (அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மட்டுமே அதிபராக இருப்பவர்களை, இலங்கையில் பதில் அதிபர் என்று அழைக்கின்றனர்) தேர்ந்தெடுக்கப்பட்டார் ரணில் விக்ரமசிங்க. இந்த நிலையில், ஜூலை 20-ம் தேதி அன்று இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த அதிபர் தேர்தலில், பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சேவின் `இலங்கை பொதுஜன முன்னணி’ கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப்பெரும, `மக்கள் விடுதலை முன்னணி’ கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். இதில், 134 வாக்குகளைப் பெற்ற ரணில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்படி, 2024 நவம்பர் வரை இலங்கையின் அதிபராக அவர் செயல்படுவார். அதிபராகத் தேர்வான பிறகு, “இலங்கை மக்களின் நலன் கருதி, அனைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கிறேன்” என்றார் ரணில்.
இந்த நிலையில், ரணில் அதிபராகத் தேர்வான உடனேயே `எங்கள் போராட்டம் தொடரும்’ என்று அறிவித்தனர் அரசுக்கு எதிராகப் போராடும் இலங்கை மக்கள். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு `கோ ஹோம் ரணில்’ என்ற முழக்கத்தோடு போராடி வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்திய பிறகுதான், ரணில் அதிபர் மாளிகைக்குள் செல்ல முடியும் எனச் சொல்லப்படுகிறது. அதிபர் தேர்வுக்கான வாக்கெடுப்புக்கு முன்னரே, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள சில விஷயங்களைச் செய்தார் ரணில். விவசாயிகளுக்கான கடனை அதிரடியாகத் தள்ளுபடி செய்தார். மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் நிலையிலிருப்பதாக அறிவித்தார். இதன்மூலம் இலங்கைக்குக் கூடிய விரைவில் நிதியுதவிகள் கிடைக்கும் என்ற பிம்பத்தை உருவாக்கினார். தற்போது நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அதிபரும் ஆகிவிட்டார் ரணில். இனி மக்கள் எதிர்ப்பை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது குறித்து இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள், “ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்.பி மட்டுமே. ரணில்தான் அந்த ஒற்றை எம்.பி. ஒரே ஒரு எம்.பி-யை வைத்துக்கொண்டு முதலில் பிரதமரானவர், தற்போது அதிபராகிவிட்டார். இதற்கு கோத்தபய ராஜபக்சேவும், அவரின் கட்சியின் சில எம்.பி-க்களும் ஒரு காரணம் என்றால், ரணிலின் சாமர்த்தியம் மற்றொரு காரணம். கோத்தபயவை வெளியேற்றியதைப்போல, ரணிலை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவது சுலபமல்ல. அவ்வளவு எளிதில் அவர் அதிபர் பதவியை விட்டு விலகமாட்டார். நிலையான அரசு அமையும் பட்சத்தில் உலக நாடுகளின் உதவி கிடைக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறவும் ரணில் அரசு முயன்றுவருகிறது. அதுவும் கிடைத்துவிட்டால், மக்கள் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில், தற்போது தனக்கு எதிராகப் போராடும் மக்களைச் சமாளிக்க ரணிலிடம் என்ன திட்டம் இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.
நேற்று பதவியேற்றுக் கொண்ட ரணிலிடம், `நீங்கள் ராஜபக்சேக்களின் பழைய நண்பர்தானே, அவர்களிடமிருந்து எப்படி வேறுபடப் போகிறீர்கள்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. “என்னை எப்படி ராஜபக்சேக்களின் பழைய நண்பர் என்று சொல்லமுடியும்? நான் எப்போதும் அவர்களை எதிர்த்துக் கொண்டேதான் இருந்தேன். வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுடன் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அதற்காக நான் அவர்களின் நண்பராகிவிட முடியாது” என்றார்.
“தன்னை ராஜபக்சேக்களுக்கு எதிரியாகக் காட்டிக்கொள்வதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற நினைக்கிறார் ரணில். அதே நேரம், ரணிலை ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் இயக்குகிறார்கள் என்ற ஒரு செய்தியும் சுற்றிவருகிறது. ராஜபக்சே கட்சியின் எம்.பி-க்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னணியில் ராஜபக்சே சகோதரர்கள்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நவம்பர் 2024 வரை ரணிலின் ஆட்சி நிலைக்குமா என்ற கேள்விக்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்” என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.