West Indies vs India (WIvsIND), 1st ODI Match Live score updates in tamil: வெஸ்ட் இண்டீஸ் மண்ணிற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுகிறது. இதில் முதலில் ஒரு நாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ம் தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடாத்துகிறார். அவருக்கு உறுதுணையாக ஜடேஜா செயல்பட இருக்கிறார். இந்தத் தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.
இரு அணிகளின் பலம் என்ன?
வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரராக ஷிகர் தவானுடன் இணைந்து இஷான் கிஷன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது. மிடில்-ஆடரில் ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் போன்றோர் அணிக்கு வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை, அந்த அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் திறமையான வீரர்களாக உள்ளனர். ஆனால், ஒட்டுமொத்த பங்களிப்பை கொடுக்க தடுமாறுகிறார்கள். ஒரு நாள் கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து முதலில் பேட்டிங் செய்த 12 ஆட்டங்களில் 9-ல் ஆல்-அவுட் ஆகியுள்ளனர். அதாவது 50 ஓவர்கள் முழுமையாக தாக்குப்பிடிப்பதில்லை. எனவே 50 ஓவர்கள் முழுமையாக ஆடுவதில் கவனம் செலுத்தும்படி பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் அணியின் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். ஆல்-ரவுண்டர் ஜாசன் ஹோல்டர் வருகை தந்திருப்பது அணியின் சரியான கலவைக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக விளையாடிய 6 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துள்ளது இதில் சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக உள்ளூரில் 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததும் அடங்கும். கேப்டன் நிகோலஸ் பூரன், ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ரோமன் பவெல், ஹோல்டர் உள்ளிட்டோர் நிலைத்து நின்று ஆடினால் அணி வலுவான ரன்களை குவிக்கும்.
மைதானம் எப்படி?
இன்றைய ஆட்டம் நடக்கும் போர்ட் ஆப் ஸ்பெயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசமமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இந்திய அணி 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் மழையால் முடிவு கிடைக்கவில்லை.
ஒளிபரப்பு:
வெஸ்ட் இண்டீஸில் இது பகல் ஆட்டமாகும். ஆனால் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை பிரத்யேகமாக ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பேன்கோட் நிறுவனம் பெற்றுள்ளது. அதாவது பேன்கோட் டிஜிட்டல் இணையவழியாக போட்டியை பார்க்கலாம். அந்த நிறுவனம் இந்தியாவில் டி.வி.யில் ஒளிபரப்பு உரிமத்தை தூர்தர்ஷனிடம் வழங்கியுள்ளது. எனவே இரவு 7 மணி முதல் டி.டி. ஸ்போர்ட்சிலும் இந்த ஆட்டத்தை காணலாம்.
நேருக்கு நேர்:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான கடைசி 11 ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்தியாவை 4-1 என்ற கணக்கில் வென்று இருந்தது.
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 136 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 67-ல் இந்தியாவும், 63-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 4 ஆட்டத்தில் முடிவில்லை.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷாய் ஹோப், பிராண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், குடாகேஷ் மோதி, ஜெய்டன் சீல்ஸ், கீமோ பால், கீசி கார்டி
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், இஷான் கிஷான், ஷுப்மான் கான், அவேஷ் கான் கில், , அர்ஷ்தீப் சிங்
இரு அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
வெஸ்ட் இண்டீஸ் அணி:
நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜெய்டன் சீல்ஸ்.
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (வி.கே.), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா , ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்
மழை அப்டேட்:
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு மணி நேரம் மழை பெய்யக்கூடும் என்றும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் வானம் ஓரளவு தெளிவுபெறும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
வானிலை முன்னறிவிப்பைப் பார்க்கும்போது, முதல் பாதி ஆட்டத்தில் மேகமூட்டம் மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இரு கேப்டன்களும் பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
India in West Indies, 3 ODI Series, 2022Queen’s Park Oval, Port of Spain, Trinidad 22 July 2022
West Indies
India
Match Yet To Begin ( Day – 1st ODI ) Match begins at 19:00 IST (13:30 GMT)
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil