டெல்லி: அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வேத் துறைக்கு ரூ. 259.44 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், ரயில்வே துறை வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் இருந்து ரூ.12,543 கோடி கடன் வாங்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மாநிலங்களவையில் ரயில்வே துறை சார்ந்த விவாத்தின்போது, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூலை 22) எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வெடித்த வன்முறைகள் காரணமாக ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை நாடு முழுவதும் 2,132 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் பணத்தைத் திரும்பப்பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பயணிகளிடையே குழப்பமும், பயமும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்கள் ரத்து செய்யப் பட்டதன் காரணமாக ரூ.102.96 கோடி பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. குறிப்பாக அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ரயில்வே சொத்துக்கள் சேதம் காரணமாக ரூ. 259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த சேதப்படுத்தப்பட்ட ரயில்கள் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தவர், உலக வங்கியிடம் இருந்து கிழக்கு பிராந்திய பிரத்யேக சரக்கு வழித்தடத்திற்கான கட்டுமான பணிக்காக ரூ. 12,543 கோடி அளவில் கடன் வாங்கப்பட்டதாக தெரிவித்தார்.
யில்வே அமைச்சகம் உலக வங்கியில் இருந்து 1,775 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.12,543 கோடி) நீண்ட கால கடனாக பெற்றுள்ளது. இது கிழக்கு பிராந்திய பிரத்யேக சரக்கு (EDFC) கட்டுமானப் பணிக்காக வாங்கப்பட்டுள்ளது. மேலும், உலக வங்கியில் இருந்து மூன்று தவணைகளில் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2011 அக்டோபர் 27, 2014 டிசம்பர் 11, 2016 அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் முறையே 555 மில்லியன் US$, 660 மில்லியன் US$560 மில்லியன் US$ தொகை பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் தொடர்பான பணிகளுக்கு குஜராத்தில் செலவிடப்பட்ட பணம் குறித்து மத்திய அமைச்சர் அளித்த மற்றொரு பதிலில், “கிழக்கு மற்றும் மேற்கு பிராந்திய பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் கட்டுமானத்திற்காக இதுவரை சுமார் 90,723 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், மாநில வாரியாக கடன் தொகையை குறித்த தகவல்கள் பராமரிக்கப்படவில்லை. ரயில்வே திட்டங்களின் 100 விழுக்காடு நிதியுதவி மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசிடம் இருந்தாலும், நிலம் கையகப்படுத்துதல், பயன்பாட்டு மாற்றம், சுற்றுச்சூழல் அனுமதிகள், சாலை மேம்பாலம் (ROBs)/ ரயில்வே கீழ் பாலம் (RUBs) ஆகியவற்றின் கட்டுமானத்தில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.