அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து தமிழக அரசியல் களத்தையே அதிர வைத்துள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி தரப்பினரால் நீக்கப்பட்டார். முன்னதாக, அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில், அதிமுக-வின் வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த கடிதத்தில் அவர், “கடந்த 11-07-2022 அன்று சட்டவிரோதமான பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்ட விதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை, பொருளாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் படி, தற்போது வரை நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர். அதிமுக பொதுக்குழு, தொடர்பான வழக்குகள் இன்னும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.இதனால் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் வரை அதிமுக-வின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.