கொல்கத்தா: பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடை பெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் மாநில கல்வித் துறை அமைச்சர் பரேஷ் அதிகாரி வீடுகளில் அமலாக்கத் துறை நேற்று சோதனை மேற்கொண்டது.
அமலாக்கத் துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியது. மற்றொரு அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள பரேஷ் அதிகாரி வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியது.
இவ்வழக்குத் தொடர்பாக நேற்றைய தினம் 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 20 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சி, தங்கம் ஆகியவையும் சிக்கியுள்ளன. இவை அனைத்தும் ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில் தொடர்புடையது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்று தெரிவித்தன.
2016-ம் ஆண்டு மம்தா அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தியது. நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளதால் அமலாக்கத் துறையும் தற்போது இவ்வழக்குத் தொடர்பாக விசாரணையில் இறங்கியுள்ளது.