கொல்கத்தா: ஆசிரியர் நியமனம் மூலம் ரூ.20கோடி வரை ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது. இது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமாக இருப்வர் பார்த்தா சாட்டர்ஜி. இவர்மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக பலகோடி பணம் கைமாறியமாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் வழக்கில், பார்த்தா சாட்டர்ஜியிடம், அமலாக்கத்துறை சுமார் 26 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணையைத் தொடர்ந்து, அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின், நெருங்கிய கூட்டாளி அர்பிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 கோடி பணம் சிக்கியது. இதையடுத்து, பார்த்தா முகர்ஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை அதிகாரிகள், சால்ட் லேக்கில் உள்ள CGO வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே நடைபெற்ற விசாரணை யின்போது, பார்த்தா சாட்டர்ஜி ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளனர். இதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
முன்னதாக ஆசிரியர் நியமனம் ஊழல் தொடர்பான வழக்கில், பார்த்தா சாட்டர்ஜியிடம் விசாரணை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய புலனாய்வு அமைப்புயின் (சிபிஐ) எஃப்ஐஆர் அடிப்படையில் பணமோசடி பற்றி அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. முகர்ஜியின் வளாகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் நோக்கம் மற்றும் பயன்பாடு கண்டறியப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.