மேற்கு வங்க மாநிலத்தில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில தொழில் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த முறைகேட்டில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜியிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சாட்டர்ஜிக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜி என்பவரது வீட்டில் 20 கோடி ரூபாய் மற்றும் 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜியிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக பார்த்தா சாட்டர்ஜி புகார் கூறினார். இதனை அடுத்து 2 டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்த டாக்டர்கள் அனுமதி கொடுத்தனர்.
அப்போது விசாரணைக்கு பார்த்தா சாட்டர்ஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.