ஆடிக் கிருத்திகை: சகல செல்வங்களும் பெற வழிபடுவது எப்படி? ஓர் எளிய வழிகாட்டல்!

தீராத கஷ்டத்தைத் தீர்த்து வைத்து, சகல செல்வங்களும் அள்ளித்தரும் ஆடிக் கிருத்திகை நாளான இன்று (23-07-2022), கிருத்திகை நட்சத்திரம் இரவு 07.03 வரை உள்ளது.

ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிக் கிருத்திகையாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடிக் கிருத்திகையன்று விரதம் இருந்தால், எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். சிவபெருமானின் அருளால் தோன்றிய முருகப்பெருமான், கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். அந்தக் கார்த்திகை பெண்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறுபேரும் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வருடத்தில் தை கிருத்திகை, ஆடிக் கிருத்திகை என்ற இரு நாள்களும் சிறப்பானதாகும்.

ஆடி கிருத்திகை முருகப்பெருமான்

வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் உடனடித் தீர்வு கிடைக்க, முருகப்பெருமானை இன்றைய தினம் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். முதலில் வீட்டையும், பூஜை அறையையும் முழுமையாகத் துடைத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பூஜையறையில் முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்குப் பூக்களால் அலங்காரம் செய்து, மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்குப் புதியதாகப் பூக்களைச் சூட்டி, முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பழங்களை நிவேதனம் வைத்து, பூஜையறையில் அமர்ந்து உணவு, நீர் என எதுவும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும். விரதத்தைக் காலையில் தொடங்கி அன்றைய நாள் முழுவதும் ‘ஓம் முருகா ஓம்’ அல்லது ‘ஓம் சரவணபவ ஓம்’ என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாலை 6 மணிக்குப் பூஜை அறையில் ஆறு மண் அகல் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.

நட்சத்திர கோலம் போட்டு ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துகளை எழுதி அந்த நட்சத்திரக் கோலத்தைச் சுற்றி மண் அகல் தீபத்தை வைத்து, முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

முருகப்பெருமானுக்குச் சுத்தமான பசும் பாலில், நாட்டுச் சர்க்கரை போட்டு நிவேதனமாக வைக்கலாம், அல்லது சர்க்கரைப் பொங்கலை நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து மணக்க மணக்கச் சமைத்து நிவேதனமாக வைக்கலாம்.

முருகப்பெருமான்

வேண்டுதலை முருகப் பெருமானிடம் மனமுருகிச் சொல்லி, கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது பல மடங்கு பலனைத் தரும். இறுதியாகப் பெருமானுக்குத் தீப தூப, கற்பூர ஆராதனைக் காட்டி பூஜையை நிறைவு செய்து, இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை முதலில் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

மனதார முருகப் பெருமானை வேண்டி இந்தப் பூஜையைச் செய்பவர்களின் வேண்டுதல், கூடிய விரைவில் நிச்சயம் நிறைவேறும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.