கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் நேற்று கூடிய நிலையில் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்க முதலீட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. இனி பிரிட்டன் நாட்டில் வேலை வாங்குவது ஈசி.. எப்படி தெரியுமா..?!
750,000 வேலை வாய்ப்புகள்
கர்நாடக மாநில அமைச்சரவை புதிய வேலைவாய்ப்பு கொள்கையின் கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் மக்களுக்கு 750,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய பதவிகளை இணைக்க அரசு முயற்சி செய்வதோடு முதலீட்டாளர்களை உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
வேலை வாய்ப்புகளை உருவாக்க கவனம்
கர்நாடக மாநில அரசு மக்களுக்கு வேலைகளை எவ்வாறு அளிக்க திட்டமிட்டுள்ளது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும் ஜவுளி, தோல் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழிலாளர்களை அதிகம் கொண்ட துறைகளில் தாராளமான ஊக்கத்தொகையுடன் கூடிய விரைவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க கர்நாடகா கவனம் செலுத்தும் என்று சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வேலைகளின் எண்ணிக்கையை பொருத்து முதலீட்டாளர்கள் அரசிடம் இருந்து சில சலுகைகளை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வேலைவாய்ப்பு
முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்த புதிய வேலைவாய்ப்பு கொள்கையில், மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும், குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு, வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள்
பல்வேறு பிரிவுகளில் எவ்வாறு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன என்றும், புதிய கொள்கையின்படி, பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றும் சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி கூறினார்.
உள்ளூர் மக்களுக்கு வேலை
கடந்த ஆண்டு, ஹரியானா அரசு உள்ளூர் மக்களுக்கு தனியார் துறை வேலைகளில் 75% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சட்டம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. ஆனால் பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தடையை ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது. எனவே உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் விரைவில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
நம் நாட்டைப் பொறுத்த வரையில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று விவசாயிகள், இரண்டாவது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். தேசத்தை கட்டியெழுப்புவதில் புலம்பெயர்ந்தவர்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் உரிமைகளை புறக்கணிக்கவே முடியாது. அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கலாம், அரசாங்கத் திட்டங்களின் பலன்களை எப்படிப் பெறுவது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
பட்டினி சாவு
இந்தியாவில் எந்த ஒரு குடிமகனும் பட்டினியால் சாகக்கூடாது என்பதே நோக்கம். துரதிர்ஷ்டவசமாக நமது வளர்ச்சியை மீறி பட்டினி சாவு நடக்கிறது. குடிமக்கள் பசியாலும், உணவின்றியும் மடிகிறார்கள். கிராமங்களில் பசியெடுக்காமல் இருக்க வயிற்றை இறுக்கமாக கட்டிக்கொள்கிறார்கள். எனக்கு தெரியும். புடவை அல்லது வேறு துணியால் வயிற்றைக் கட்டிக்கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு தூங்குகிறார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உணவு வாங்க முடியாததால் அதைச் செய்கிறார்கள்” என்று நீதிபதி பி.வி. நாகரத்னா கூறினார்.
உச்சநீதிமன்றம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றும் அவர்களின் உரிமைகளை புறக்கணிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறிய மறுநாளே கர்நாடக அமைச்சரவை உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைகளை உருவாக்க புதிய வேலைவாய்ப்பு கொள்கையை அறிவித்துள்ளது.
Karnataka cabinet clears to create 7,50,000 jobs for locals
Karnataka cabinet clears to create 7,50,000 jobs for locals | உள்ளூர் மக்களுக்கு 7,50,000 வேலைவாய்ப்பு: கர்நாடக அமைச்சரவை அதிரடி திட்டம்