`எது உண்மையான சிவசேனா?’ – ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தவ், ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாதம் வீசிய புயல் இப்போதுதான் அடங்கி இருக்கிறது. சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. சிவசேனா அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக அரசு பதவியேற்று இருக்கிறது. துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்று இருக்கிறார். தற்போது உண்மையான சிவசேனா யாருடைய அணி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களிடம் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. சட்டமன்றம் மற்றும் மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்தவர்களையே உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அடுத்த கட்டமாக கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்து தங்களுக்கு கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் ஏக்நாத் ஷிண்டே அணி சார்பாக இரண்டு நாள்களுக்கு முன்பு மனுக்கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரும், மக்களவையில் மொத்தமுள்ள 18 பேரில் 12 பேரும் ஆதரவாக இருப்பதால் தேர்தல் கமிஷன் சட்டப்பிரிவு 15ன் கீழ் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே தரப்பில் கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் தேர்தல் கமிஷனுக்கு பல முறை கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கட்சியில் சிலர் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர். கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் கட்சியின் சின்னத்தையோ அல்லது பால் தாக்கரே பெயரையோ பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார். இம்மனு கிடைத்தவுடன் தேர்தல் கமிஷன் துரித வேகத்தில் செயல்பட ஆரம்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்குள் உண்மையான சிவசேனா யாருடையது என்பதை முடிவு செய்யவேண்டிய நெருக்கடியில் தேர்தல் கமிஷன் இருக்கிறது. இதற்காக ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகிய அணிகள் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் முறைப்படி கடிதம் அனுப்பி இருக்கிறது. இக்கடிதத்திற்கு வரும் 8ம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு அணியினரும் கொடுத்துள்ள கடிதங்களை பார்க்கையில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில் இரண்டாக உடைந்திருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக தங்களது தரப்பில் இருக்கும் ஆதாரங்கள், விளக்கங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே

தேர்தல் கமிஷன் இவற்றை கேட்கும் என்று முன்னரே கருதிய உத்தவ் தாக்கரே, ஏற்கனவே தனது மாவட்ட நிர்வாகிகளிடம் 50 லட்சம் பேர் கொண்ட கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை உடனே தயாரிக்கும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். மற்றொரு புறம் ஏக்நாத் ஷிண்டே மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்களை தனது பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது அணியில் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களிடம் சொல்லி அவர்களை களத்தில் இறக்கிவிட்டு வேலை செய்து வருகிறார்.

இரு தரப்பினரும் தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை திரட்டுவதில் பம்பரமாக வேலை செய்து வருகின்றனர். நினைத்தது நடந்துவிட்டதாக கருதி பாஜக இந்நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. உத்தவ் தாக்கரே இல்லாத சிவசேனாவை உருவாக்கவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.